தூய்மை இந்தியா திட்டத்துக்காக பெட்ரோல், டீசல் மீது வருகிறது புது வரி

தினகரன்  தினகரன்
தூய்மை இந்தியா திட்டத்துக்காக பெட்ரோல், டீசல் மீது வருகிறது புது வரி

மாற்றம் செய்த நேரம்:1/22/2016 2:28:12 AM

02:19:53Friday2016-01-22

புதுடெல்லி: தூய்மை இந்தியா திட்டத்துக்காக நிதி திரட்ட பெட்ரோல், டீசல் மீது வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  தூய்மை இந்தியா திட்டத்தை மத்திய அரசு 2014 அக்டோபர் 2ம் தேதி துவங்கியது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு அனைவரும் பங்களிப்பு செய்ய வேண்டும், இதற்கான நிதியை தாராளமாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கெனவே கேட்டுக்கொண்டது. இதற்காக தனியாக தூய்மை இந்தியா வரியை மத்திய அரசு அறிவித்தது.

 தூய்மை இந்தியா நோக்கத்தை அடைவதற்கான இலக்கு 2019ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்குள் சுத்தத்தை உறுதி செய்வது மற்றும் 4,041 நகர்ப்புறங்களில் திறந்தவெளியில் மலம் கழிக்கும் அவலம் இல்லாத நிலையை 2019ம் ஆண்டுக்குள் உறுதி செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு சுமார் ரூ.2.23 லட்சம் கோடி முதலீடு செய்யவேண்டியுள்ளது. இந்த நிதியை திரட்டுவதற்கு பல்வேறு வழிகளையும் அரசு ஆராய்ந்து வருகிறது. இதற்காக 2015-16 பட்ஜெட்டிலேயே 2 சதவீதம் வரை வரி விதிக்க உத்தேசிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் மீது தூய்மை இந்தியா வரி விதிப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த திட்டத்தை செயல்படுத்த இன்னும் நிதி தேவைப்படுவதால், இதை திரட்டுவதற்கான பரிந்துரைகளை நிதி ஆயோக் சமர்ப்பித்துள்ளது. இதில் டீசல் மீது அரை சதவீத கூடுதல் வரி விதிப்பு போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளன. தூய்மை இந்தியா இலக்கை எட்டுவதற்கு தற்போது திரட்டப்பட்டுள்ள நிதி போதாது. இதனால் நிதி ஆதாரங்களை அதிகரிக்க வேண்டியுள்ளது. இதை கருத்தில் கொண்டே இந்த பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் இத்திட்டத்துக்கு நிதி திரட்டுவது பற்றி மாநிலங்களுடனும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என நிதி ஆயோக் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மாநில அரசுகளுடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் மத்திய அரசு மற்றும் மாநிலங்களின் பங்களிப்பு விகிதாசாரம் 75:25 என இருக்கும். மலைப்பிரதேச மாநிலங்களை பொறுத்தவரை இந்த விகிதாசாரம் 9.:10 என்ற அளவில் இருக்கும் என அவர் தெரிவித்தார்.  தூய்மை இந்தியா திட்டத்தில் மொத்தம் 1.04 கோடி வீட்டு கழிவறைகள் கட்டுவது, 2.52 லட்சம் பொது கழிவறைகள் கட்டுவது மற்றும் 30 கோடி நகர்ப்புற மக்களுக்காக திடக்கழிவு மேலாண்மை திட்டத்துடன் கூடிய 2.54 லட்சம் பொது கழிவறைகள் கட்டுவது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2014-15ம் நிதியாண்டில், 28 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.800 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கலால் வரியால் கிடைக்காத பலன்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வருகிறது. இதற்கேற்ப எண்ணெய் நிறுவனங்கள் விலையை மாற்றியமைத்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்தாலும், மத்திய அரசு இவற்றின் மீது கலால் வரி விதிக்கிறது. இதனால், விலை குறைப்பின் பயன் மக்களை சென்றடைவதில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் புதிதாக தூய்மை இந்தியா வரி விதிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் விலை உயர்வது மட்டுமின்றி சரக்கு போக்குவரத்து கட்டணம், விலைவாசி உயரவும் வாய்ப்பு உள்ளது.

பத்திரங்கள் மூலம் நிதி திரட்ட முடிவு

வரிகள் மூலம் தூய்மை இந்தியா திட்டத்துக்கு நிதி சேர்ப்பதோடு, பத்திரங்கள் மூலமாகவும் நிதி திரட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா பத்திரங்கள் என்ற பெயரில் இவை வெளியாகும் என தெரிகிறது. இது நீண்ட கால முதலீடு கொண்டதாகவும், வரி விலக்கு சலுகை உள்ளதாகவும் இருக்கும் என நிதியமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன.

வரி மேல் வரி

கடந்த ஆண்டு  மே 31 வரை சேவை வரியாக 12.36 சதவீதம்தான் விதிக்கப்பட்டது. பின்னர் மத்திய  பட்ஜெட்டில் அறிவித்தபடி ஜூன் 1ம் தேதி முதல் சேவை வரி 14 சதவீதமாக  உயர்ந்தது. இத்துடன் அரை சதவீத தூய்மை இந்தியா வரியும் சேர்த்து தற்போது  சேவை வரி 14.5 சதவீதமாக உள்ளது. இது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த கூடுதல் வரி வருவாய்  முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்துக்கே செலவிடப்படும் என மத்திய அரசு  அறிவித்திருந்தது.

மூலக்கதை