திட்டம் 2023 வரை நீட்டிப்பு ஜவுளி தொழில்நுட்ப மேம்பாடுக்கு 17,822 கோடி மானியம் ஒதுக்கீடு

தினகரன்  தினகரன்
திட்டம் 2023 வரை நீட்டிப்பு ஜவுளி தொழில்நுட்ப மேம்பாடுக்கு 17,822 கோடி மானியம் ஒதுக்கீடு

00:23:31Monday2016-01-18

கோவை: ஜவுளித்தொழில்துறையினரின் தொழில்நுட்ப மேம்பாட்டு நிதிக்கு மத்திய அரசு 17,822 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இத்தொகை ஜவுளித்துறையினர் இயந்திரங்கள் கொள்முதல் செய்ய முதலீட்டு மானியமாக வழங்கப்பட உள்ளது. ஜவுளித்துறையினருக்கு தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு மத்திய அரசு கடந்த கடந்த 1999ம் ஆண்டு நிதி உதவித்திட்டத்தை துவக்கியது. கடந்த 2014 செப்டம்பர் வரை அமலில் இருந்த இத்திட்டம் அதற்கு பின் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக ஜவுளித்தொழில் நலிவடைந்துள்ள நிலையில், ஜவுளித்தொழில்நுட்ப மேம்பாடு மானியமும் வராததால் ஜவுளித்துறையினர் நஷ்டமடைந்தனர். அரசு வழங்கும் தொழில்நுட்ப மேம்பாடு நிதியை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரி வந்தனர். இந்நிலையில் கடந்த 13ம் தேதி, மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் வெளியிட்ட அரசாணையில் ஜவுளித்துறை தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி (டப்) திட்டத்தை 7 ஆண்டுகளுக்கு, வரும் 2023ம் ஆண்டு வரை நீட்டித்தும், அதற்கான நிதியாக 17,822 கோடியும் ஒதுக்கியுள்ளதாகவும், இது 2016 ஜனவரி 13ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்றும் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தென்னிந்திய மில்கள் சங்கம் (சைமா) செயலாளர் செல்வராஜ் கூறியதாவது: ‘தற்போது திருத்தி அமைக்கப்பட்ட ஜவுளி தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய நாடா இல்லா தறிகள், பின்னலாடை இயந்திரங்கள், துணி பதனிடும் இயந்திரங்கள், ஆயத்த ஆடை இயந்திரங்கள், சைசிங் இயந்திரங்கள், சணல், பட்டு உற்பத்தி இயந்திரங்கள் உள்ளிட்ட ஜவுளித்துறை இயந்திரங்கள் வாங்கும் தொகையில் 10 சதவீத மூலதன சலுகையாக அதிகபட்சம் 20 கோடி கிடைக்கும். ஆயத்த ஆடை தொழில்நுட்ப ஜவுளி இயந்திரங்கள் வாங்க 15 சதவீதம் முதலீட்டு மானியமும், அதிகபட்சம் 30 கோடியும் கிடைக்கும்’’ என்றார்.

இந்த திட்டத்தில் முதலீட்டு மானியம் சிலவற்றிற்கு அதிகரித்திருந்தாலும், வட்டி மானியம் வழங்கப்படவில்லை. மேலும் 2016ம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி முதல் வாங்கும் இயந்திரங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் ஏற்கெனவே வாங்கியவர்களுக்கு கூடுதல் சதவீதம் பலன் தராது. மேலும் தற்போது ஒதுக்கப்பட்ட நிதியான 17,822 கோடியில் 12 ஆயிரம் கோடி ஏற்கனவே பாக்கி வைத்துள்ள கொள்முதலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 ஆயிரம் கோடி புதிய கொள்முதலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது போதுமானதல்ல என ஜவுளித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை