ஈழத்தமிழர் விடுதலை பெற போராடுவோம்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 15, ஜனவரி 2016 (21:8 IST)

மாற்றம் செய்த நாள் :15, ஜனவரி 2016 (21:8 IST)

ஈழத்தமிழர் விடுதலை பெற போராடுவோம்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி

தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற நம்பிக்கையுடன் ஈழத்தமிழர் விடுதலை பெற போராடுவோம் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் புலம்பெயர் விவகாரங்களுக்கான அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி கூறியுள்ளார்.

தமிழர் திருநாளினையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழினமானது, தனக்கெனத் தனித்துவமான மொழி, கலை, பண்பாடு, மரபுகள், வழக்காறுகள் முதலிய கட்டமைப்புகளைக் கொண்ட ஓர் இனமாகும். இன்று உலகிலேயே பேசப்படும் ஏழாயிரம் மொழிகளில் ஆறு மொழிகளைச் செம்மொழிகள் என உலகம் அடையாளம் கண்டுள்ளது. அதில் தமிழும் ஒன்றென்றறிந்து இன்னும் பூரிப்பு எய்துவோம். உலகத்திலே கூடுதலாகப் பேசப்படும் மொழிகளில் தமிழ் 17 ஆவது இடத்தில் உள்ளதென பெருமை கொள்வோம். தமிழ் மொழியில் இருந்து 23 மொழிகள் பிறந்திருக்கின்றன என்பதறிந்து உவகை கொள்வோம். ஏன் சிங்கள மொழியின் வளத்துக்கும் வாழ்வுக்கும் தமிழின் பங்களிப்பு அளப்பரியதாகும். இதை பண்டாரநாயக்காவே கூறியுள்ளமையையும் நெஞ்சில் நிறுத்துவோம்.

தமிழினத்தில் உணவு முறைகள், வாழ்க்கை முறைகள் யாவும் அறிவியல் அடிப்படையிலேயே அமைந்திருந்தன. வாயிலே குவளையை வைக்காமல் அண்ணாந்து குடிப்பதற்கும், உணவோடு கரியைக் கொண்டு செல்வதற்கும் இன்று அறிவியல் விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன. இன்றைய மருத்துவ உலகம் ‘உணவே மருந்து’ ‘உடற்பயிற்சியே பிணி நீக்கி’ என்று கூறுகின்றது. இதனை எம் முன்னோர் 2500 ஆண்டுகளுக்கு முன்பே அறிந்து அதன்வழி ஒழுகினர். ‘மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்திய அற்றது போற்றி உணின்’ என்ற குறளே இதற்குத் தக்க சான்றாகும்.

இன்றைய உலகில் ‘இயற்கையைப் போற்றுவோம்’ என்ற முழக்கங்களைக் கேட்கின்றோம். இது சார்ந்த மாநாடுகளைப் பார்க்கின்றோம். எனினும். நம் முன்னோர் 2500 ஆண்டுகளுககு முன்பே இயற்கையைப் போற்றிய நிகழ்வைப் பொங்கல் விழா எமக்கு எடுத்துரைக்கின்றது.

வானிலே கார்முகிலை எழச் செய்து, கடல் நீரை முகக்க வைத்து நமக்கு மழையைக் கொடுத்துப் பயிர்களுக்குமப் பசுமையைத் தந்து நமக்கும் ஒளியாக நின்று அனைத்து வளங்களும் நமக்குக் கிடைக்க கதிரவன் அல்லவா அடிப்படையானவன் என்ற செய்நன்றி மறவாத் தன்மையோடு, உயரிய எண்ணத்தோடு கொண்டாடப்படுவதே பொங்கல் விழாவாகும். பண்டைத் தமிழ் கொண்டாடிய பொங்கல் விழாவைப் புறநானூற்றிலே நாம் காணுகின்றோம். இராசராசன் காலத்திலே புதிதுண்ணல் என்ற பெயரில் கொண்டாடப்பட்டதையும் பார்க்கின்றோம்.

ஈழத்தைப் பொறுத்த வரையிலே அடுத்தடுத்து கட்சிக்கு வந்த சிங்கள அரசுகளால் இப்பண்பாட்டு விழுமியங்கள் யாவும் அழிக்கப்பட்டன அல்லது அழிந்தன. இலங்கை ஆங்கிலேயரிடமிருந்து விடுலை பெற்ற நாள் முதல் இன்றை நாள் வரை நடந்தேறிய நிகழ்ச்சிகள் யாவும் தமிழர் கலைபண்பாடுகளை வாழ்க்கை முறைகளை சீரழிப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தன என்பதைச் சமூகவியலாளர்கள் நன்கறிவர். 

எடுத்துக்காட்டாக ஆணும், பெண்ணும் காது குத்தும் வழக்கம் தமிழரிடையே காணப்பட்டது. இது இக்கால ‘அக்குபஞ்சர்’ முறை ஒத்த ஒரு செயற்பாடாகும். 1956 இனக்கலவரத்தில் காது குத்தியோர் தமிழர் என எளிதாக அடையாளங் காணப்பட்டனர். இவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டனர். அல்லது கொல்லப்பட்டனர். இதன் விளைவாக ஈழத்தமிழர் காது குத்தும் வழக்கத்தைக் கைவிட்டனர். இது போல தமிழர் வழக்காறுகள் ஒவ்வொன்றாக மறைந்து செல்வதைக் காணக் கூடியதாக உள்ளது.

ஈழத்தமிழ் மக்களுக்கு இழந்த நாட்டை மீட்டு எடுப்பது ஒன்றே வழி! என்ற வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேறி 40 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் இவ்வாண்டுப் பொங்கல் விழாவைக் கொண்டாடப் போகின்றோம். இந்த வேளையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அதன் தலைமை அமைச்சர் வி. உருத்திரகுமாரன் தலைமையில் தமிழீழத்துக்கான யாப்பு உருவாக்கும் செயற்திட்டமானது, தமிழீழ மக்களின் பெருவிருப்பான சுதந்திர தமிழீழத்தை நோக்கிய நகர்வை விரைவுபடுத்தப்படும் என நம்புகின்றேன். 

ஈழத்தமிழினம் விடுதலை பெற வேண்டுமாயின் புலம்பெயர்ந்து வாழும் தமிழர் ஒற்றுமையையும், ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்த வேண்டும்.

கனடாவில் சனவரி மாதமானது தமிழ் மரபுத்திங்கள் என வழங்கப்படுகிறது. கனடாவின் பல்பண்பாட்டுக்  கொள்கைகளுக்கு ,ணைவாகவும், கனடா வாழ் தமிழ் மக்களின் ஒன்றுபட்ட சமூக வளர்ச்சிக்கு உந்து சக்தியாகவும் தமிழ் மரபுத்திங்கள் அமைகிறது. மாநில அளவில் கனடாவின் ஒன்ராறியோ மாநில அரசு தமிழ் மரபுத்திங்களை அரசுமுறைப்படி  ஏற்றுள்ளது.  மேலும்  ஒன்ராறியோவில் உள்ள பல்வேறு உள்ளுராட்சி மன்றங்களும், கல்விச் சபைகளும்  தமிழ் மரபுத்திங்களை ஏற்று  ஒப்புதல் வழங்கி  வருகின்றன. 

தமிழ் மரபுத்திங்கள் கருத்தியலை உலகளாவிய நிலையில் எடுத்துச் செல்லும் முயற்சியின் வெளிப்பாடாக, உலகளாவிய தமிழ் மரபுத் திங்கள் என்ற தீர்மானத்தை நாடுகடந்த தமிழீழ அரசு நிறைவேற்றி உள்ளது என்பதை இவ்விடத்தே கூறுவது பொருத்தமென நம்புகிறேன்.எனவே, இந்தத் திங்களில் தமிழ்மொழி, தமிழ்ப் பண்பாடுகள், தமிழ்விழுமியங்கள், தமிழ்மரபுகளைப் பேணி வளர்ப்போமாக.

‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற முதுமொழிக்கமைய பிறக்கப் போகும் தைத்திங்கள் தமிழ் மக்கள் அனைவருக்கும் எல்லா நன்மைகளையும் கொண்டு வர வேண்டுமென வாழ்த்துகின்றேன்.

மூலக்கதை