சர்வதேச கால்பந்து போட்டிகளுக்கு திண்டுக்கல் வீராங்கனை நடுவராக தேர்வு

நக்கீரன்  நக்கீரன்
சர்வதேச கால்பந்து போட்டிகளுக்கு திண்டுக்கல் வீராங்கனை நடுவராக தேர்வு

பதிவு செய்த நாள் : 3, ஜனவரி 2016 (8:26 IST)

மாற்றம் செய்த நாள் :3, ஜனவரி 2016 (8:26 IST)

சர்வதேச கால்பந்து போட்டிகளுக்கு திண்டுக்கல் வீராங்கனை நடுவராக தேர்வு

திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டியை சேர்ந்தவர் ரூபாதேவி (வயது 26). பிஎஸ்சி வேதியியல் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பயிற்சிக்கான படிப்பை முடித்துள்ளார். கால்பந்து விளையாட்டில் அதிக ஆர்வம் உடைய இவர், பள்ளிக்கூட அணி முதல் இந்திய அணி வரை பங்கேற்று விளையாடியவர். மதுரை காமராஜர் பல்கலைக்கழக அணி மற்றும் திண்டுக்கல் கால்பந்துக் கழக அணிக்காக விளையாடியவர். 2006–07–ம் ஆண்டு நடுவர்களுக்கான தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற ரூபாதேவி தேசிய அளவிலான கால்பந்து போட்டிகளுக்கு நடுவராக பணியாற்றியுள்ளார். சில ஆசிய போட்டிக்கான நடுவர் குழுவிலும் இடம் பெற்றிருந்தார்.

இந்த நிலையில் ஆசிய கால்பந்து சம்மேளனம் சார்பில், ரூபாதேவியை சர்வதேச கால்பந்து நடுவராக நியமனம் செய்யலாம் என்று சர்வதேச கால்பந்து சம்மேளனத்துக்கு(பிபா) பரிந்துரை செய்யப்பட்டது. அதற்கான எழுத்து மற்றும் உடல்திறன் தேர்வுகளில் அவர் வெற்றி பெற்றார். இதையடுத்து ரூபாதேவி, சர்வதேச கால்பந்து போட்டிகளின் நடுவராக அதிகாரபூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் தமிழகத்தின் முதல் சர்வதேச கால்பந்து பெண் நடுவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகி இருக்கிறார். 

ரூபாதேவி கூறும்போது, இது எதிர்பாராத சந்தோஷத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்ததருணத்தில் எனது நலன் விரும்பிகளுக்கும், திண்டுக்கல் மாவட்ட கால்பந்து சங்கத்துக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். 

ரூபாதேவியின் தந்தை பெயர் குருசாமி. மில்தொழிலாளி. தாயார் செல்லம்மாள். சில ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் இறந்தநிலையில், தனது அக்காள் விஜயலட்சுமி வீட்டில் ரூபாதேவி வசித்து வருகிறார்.

மூலக்கதை