ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ் மோதும் பாக்சிங் டே டெஸ்ட் இன்று தொடக்கம்

கதிரவன்  கதிரவன்
ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ் மோதும் பாக்சிங் டே டெஸ்ட் இன்று தொடக்கம்

ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்குகிறது. முந்தைய டெஸ்டில் 4-வது விக்கெட்டுக்கு உலக சாதனை படைத்த ஷான் மார்ஷ் நீக்கப்பட்டிருக்கிறார்.

ஆஸ்திரேலியாவில் விளையாடி வரும் ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. ஹோபர்ட்டில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 212 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி, உலகின் மிகப்பெரிய மைதானமான மெல்போர்னில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டி ‘பாக்சிங் டே’ என்று அழைக்கப்படும்.

‘பாக்சிங் டே’ பெயர் வந்ததற்கு சில காரணங்கள் உண்டு. மேலை நாடுகளில் கிறிஸ்துமஸ் அன்று தேவாலயங்கள் முன்பு பெரிய பாக்ஸ் வைக்கப்படும். ஆலயத்திற்கு வருபவர்கள் அதில் நன்கொடை வழங்குவார்கள். மறுநாள் அதாவது டிசம்பர் 26-ந்தேதி அன்று பாக்ஸ் பிரித்து அதில் உள்ள பணம், பொருட்கள் ஏழைகளுக்கு வழங்கப்படும். பாக்சை திறக்கும் அந்த நாளை ‘பாக்சிங் டே’ என்கிறார்கள். முன்பு கிறிஸ்துமஸ் பண்டிகை அன்றும் ஓய்வின்றி வேலைசெய்து விட்டு, மறுநாள் தங்கள் குடும்பத்தினரை பார்க்க செல்லும் தொழிலாளர்களுக்கு முதலாளிகள் கிறிஸ்துமஸ் பாக்சை பரிசாக கொடுத்து அனுப்புவது வழக்கம். இதன் அடையாளமாகவும் பாக்சிங் டே பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது.

1950-ம் ஆண்டு முதல் மெல்போர்னில் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் நடந்து வருகிறது. சில காரணங்களால் குறிப்பிட்ட ஆண்டுகள் அந்த நாளில் ‘பாக்சிங் டே’ டெஸ்டை நடத்த முடியவில்லை. இதன் பிறகு 1980-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் நடத்தும் உரிமையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பெற்றது. இப்போது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26-ந்தேதி அன்று மெல்போர்னில் ஏதாவது ஒரு அணி ஆஸ்திரேலியாவிடம் விளையாடி கொண்டிருக்கும். இந்த முறை அந்த இடத்தை வெஸ்ட் இண்டீஸ் பூர்த்தி செய்கிறது. 2000-ம் ஆண்டுக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் விளையாடும் முதல் பாக்சிங் டே டெஸ்ட் இதுவாகும்.

எல்லா வகையிலும் வலுவாக காணப்படும் ஆஸ்திரேலிய அணி இந்த டெஸ்டிலும் ஆதிக்கம் செலுத்தி வெற்றிக்கனியை பறிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2015-12-26

மூலக்கதை