மக்கள் படும் கஷ்டங்கள் என்னை கவலையில் ஆழ்த்தி உள்ளது: கமல்ஹாசன் பேட்டி

கதிரவன்  கதிரவன்
மக்கள் படும் கஷ்டங்கள் என்னை கவலையில் ஆழ்த்தி உள்ளது: கமல்ஹாசன் பேட்டி

வெள்ள சேத பாதிப்பால் மக்கள் படும் கஷ்டங்கள் தன்னை கவலையில் ஆழ்த்தி உள்ளதாகவும், சென்னைக்கே இந்த நிலைமையா? என்று வியப்படைவதாகவும் கமல்ஹாசன் கூறினார்.

இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் நேற்று அளித்த பேட்டி வருமாறு:-

மழை வெள்ளத்தால் பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது. இதனை, இயற்கை பேரிடர் என்பது குறைத்து மதிப்பிடும் வார்த்தை. சென்னைக்கே இந்த நிலைமை ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதிகளையும் கற்பனை செய்து பாருங்கள்?.

ஏழைகளும் நடுத்தர மக்களும் வெள்ள பாதிப்பினால் அச்சத்தில் இருக்கிறார்கள். இதற்காக வசதி படைத்தவர்கள் வெட்கப்பட வேண்டும். நான் பெரிய பணக்காரன் இல்லை. ஆனாலும் என் ஜன்னலை திறந்து வெளியே மக்கள் படும் கஷ்டங்களை பார்த்து வெட்கப்படுகிறேன். எனக்கு கடவுள் கிடையாது நிர்வாகம் சீர்குலைந்து இருக்கிறது. மழை நின்ற பிறகும் கூட பாதிப்பில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு சென்னை திரும்புவதற்கு பல மாதங்கள் ஆகும்.

மக்கள் செலுத்திய வரிப்பணம் எங்கே போனது? நான் கருப்பு பணம் வைத்திருக்கவில்லை. என்னுடைய வரியை ஒழுங்காக செலுத்தி வருகிறேன். கடுமையாக நான் உழைத்து சம்பாதித்த அந்த பணத்தை வைத்து எனக்கும் என் மக்களுக்கும் நிர்வாகம் என்ன செய்து இருக்கிறது? எனக்கு கடவுள் கிடையாது. கடவுளாக பாவித்துக்கொள்பவர்களின் முடிவுகளையும் ஏற்க மாட்டேன்.

ஆளும் அரசாங்கமானது, அது எந்த கட்சியாக இருந்தாலும் கார்ப்பரேட் திட்டத்துக்கு ரூ.4,000 கோடி வரை செலவிட முடிகிறது. நாட்டில் நாம் 120 கோடி மக்கள் இருக்கிறோம். இந்த மக்களுக்கு ரூ.4,000 கோடியை ஏன் பிரித்துக் கொடுக்க கூடாது? அப்படி கொடுத்து இருந்தால் இந்தியர்கள் கோடீஸ்வரர்கள் ஆகி இருப்பார்கள்.

மக்கள் படும் துன்பங்கள் என்னை கவலையில் ஆழ்த்தி இருக்கிறது. நான் வசதியான வீட்டில் இருப்பதற்காக வெட்கப்படுகிறேன். அரசாங்கத்துடன் ஒப்பிடும்போது எனது வருமானம் மிகவும் சொற்பமானது. ஆனால் வெள்ள நிவாரணத்துக்கு அரசு நம்மிடம் பணம் கேட்கிறது. ஆனாலும் நான் பணம் கொடுப்பேன். ஏனென்றால் அரசு நிர்வாகத்தை நான் மதிக்கிறேன். வசதி படைத்தவனாக என்னை நினைத்துக்கொண்டு கொடுக்கப்போவது இல்லை. நான் எனது மக்களை உண்மையாகவே நேசிக்கிறேன்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

2015-12-04

மூலக்கதை