அன்பின் ஆழத்தில் இனிய இல்லறம்

தினத்தந்தி  தினத்தந்தி
அன்பின் ஆழத்தில் இனிய இல்லறம்

லக மொழிகளிலேயே உயர்ந்த மொழி எது?

உலக மொழிகள் அனைத்தையும் ஒருவர் அறிந்திருக்க முடியாது. ஆனால் நாமறிந்த மொழிகளிலேயே உயர்ந்த மொழி எது என்று எண்ணிப்பார்க்க முடியும்.

மகாகவி பாரதியும் அப்படித்தான் எண்ணிப்பார்த்தார் அவருக்குப்பதில் கிடைத்தது. அதன் பெயர் 'தமிழ்'.

அந்தத் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு தமிழ்நாட்டிலும், அயல்நாடுகளிலும் வாழ்ந்து வரும் நாம் தமிழர்கள். தமிழ் மக்களிடையே நம் சொந்தத் தன்மை அழியா வண்ணம் வழிவழியாக நிலவி வரும் பண்பாடு தமிழ்ப்பண்பாடு. தமிழ்மொழி, தமிழ்மண், தமிழ்ப்பண்பாடு இம்மூன்றும் நம் அடையாளங்கள். இந்த அடையாளங்களைக் காப்பாற்றிக் கொள்வதே நம்மைநாம் காப்பாற்றிக்கொள்ளும் வழியாகும்.

இந்த அடையாளங்கள் இன்று அழிந்து கொண்டு வருகின்றன. எல்லாவற்றிலும் புதுமையை விரும்புவது மனித இயல்பு. இருந்தாலும், பழமையை சுலபமாக விட்டு விடுவதில்லை. அத்தகைய பழமை பாராட்டுவதே மரபின் அடிப்படை.

கலை இலக்கியங்கள் மரபைப் பின்பற்றியதால் தான் இன்னும் நிலைத்திருக்கின்றது. குறிப்பாக சங்க இலக்கிய அகத்திணைப் பாடல்கள் அனைத்தும் மரபின் அடிப்படையிலேயே எழுதப்பட்டிருக்கின்றன. இப்பாடல்கள் பழமையாக இருந்தாலும் இன்றைய நம் வாழ்க்கைக்கும் வழிகாட்டிக் கொண்டிருக்கின்றன. அப்படி வழிகாட்டிக்கொண்டிருக்கும் இலக்கியங்களுள் ஒன்றுதான் 'குறுந்தொகை'.

நல்ல குறுந்தொகை

எட்டுத்தொகை நூல்களுள் முதன்முதலாகத் தொகுக்கப்பட்ட நூலாகும். இதனைத் தொகுத்தவர் யாரெனத் தெரியவில்லை. தொகுப்பித்தவர் பூரிக்கோ.
இந்நூல் 'நல்ல' என்னும் அடைமொழியோடு சேர்த்து 'நல்ல குறுந்தொகை' என்று அழைக்கப்படுகின்றது. 'குறுந்தொகை நானூறு' என்ற பெயரும் இந்நூலுக்கு உண்டு. எனினும் தற்போது 402 பாடல்கள் காணப்படுகின்றன.

குறுகிய அடிகளை உடையதால் குறுந்தொகை எனப்பெயர் பெற்றது. இக்குறுந்தொகை சங்க காலத்தில் வாழ்ந்த மக்களின் காதல் வாழ்வையும், இல்லற வாழ்வையும் இனிமையாக எடுத்துரைக்கின்றது.

அன்பின் ஆழம்


ஆண், பெண் இருவரையும் தலைவன், தலைவி என்ற பொதுப்பெயரால் குறிப்பிடுவது சங்க இலக்கிய மரபு. அந்த வகையில் தலைவி ஒருத்தி தலைவன் மீது மாறாத அன்பு கொண்டிருக்கிறாள். தலைவன் 'களவு வாழ்க்கை'யில் தலைவியை ரகசியமாக வந்து சந்திக்கிறான். இந்தச் சந்திப்பு பல நாட்கள் தொடர்கின்றன. தோழி இதனைப் பார்த்து விடுகின்றாள்.

அப்பொழுது தலைவனிடம், 'ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறாய், தலைவியை உடனே திருமணம் செய்து கொள்ள வேண்டும்' என்று எச்சரிக்கிறாள்.

தலைவி இதனை அறிகிறாள். எச்சரித்த தோழியிடம் தலைவனைப் பற்றி கொஞ்சம் உச்சரிக்கிறாள்.  

அப்போது, 'நான் என் தலைவனோடு கொண்டிருக்கின்ற நட்பு எப்படிப்பட்டது தெரியுமா? இதோ! மலையும் மலைசார்ந்திருக்கின்ற குறிஞ்சி நிலம். இதில் குறிஞ்சிப்பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. அந்தப்பூக்களில் தேன் அருந்திய வண்டுகள் உயர்ந்து வளர்ந்திருக்கின்ற சந்தனமரங்களில் தேன் கூடுகள் கட்டியிருக்கின்றன. அப்படிப்பட்ட உயர்ந்த நாட்டின் தலைவன். அந்த தலைவனோடு தான் நான் நட்புக்கொண்டிருக்கின்றேன். அந்த நட்பு இந்த நிலத்தைவிடப்பெரியது, வானைவிட உயர்ந்தது, கடலைவிட ஆழமானது' என்று பெருமிதத்தோடு கூறுகிறாள்.

இதனைத்தான்...

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆர்அள வின்றே - சாரல்
கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இளைக்கும் நாடெனொடு நட்பே


என்கிறது குறுந்தொகைப்பாடல்.

தோழி இதனைக் கேட்டதும் சிலிர்த்துப் போகிறாள்.  

ஆம்! உண்மையான அன்பிற்கு ஏது எல்லை. எல்லை கடந்த அன்பின் ஆழத்தில் தானே காதல் இன்பமும் இருக்கின்றது. அதுமட்டுமல்ல இந்தப்பாடல் தலைவனின் அன்பின் ஆழத்தையும் தலைவன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் தெரியப்படுத்துகின்றது. நல்ல நட்புக்கு பலரும் எடுத்துக்காட்டும் இனிய பாடல் இது.

இரு நெஞ்சங்களின் இனிய கலப்பு


அன்பு வயப்பட்ட காதலர்கள் இருவரும் இதயத்தால் ஒன்றுபடுகின்றனர். இந்த இதயப்பிணைப்பு எப்படி இருக்கிறது தெரியுமா? 'செம்புலப் பெயல் நீர்போல' இருக்கிறதாம்.

அது என்ன 'செம்புலப்பெயல் நீர்' என்கிறீர்களா?  

இதோ! அந்த இனிய பாடலின் காட்சி.

வானத்திலிருந்து பொழிகிறது மழைத்துளி. அது கரிசல் நிலத்தில் விழுந்தால் கருமை நிறமாக மாறும். அதே மழைத்துளி செம்மண் நிலத்தில் விழுந்தால் சிவப்பாக மாறும். இப்படி சேருகின்ற இடத்தைப் பொறுத்து அதன் இயல்பை அடைவதைப் போல், காதலர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தனராம்.

ஆம்! இதுவரை அவர்கள் யார் யாராகவோ இருந்தார்கள். எந்த வகையிலும் உறவினர்கள் அல்லர். ஆனால் காதலால் அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தனராம். இதைத்தான் 'செம்புலப்பெயல் நீர் போல' என்ற உவமையால் குறிப்பிடுகின்றார் புலவர்.

இந்த இதயங்களின் இணைப்பைத்தான்,
'யாயும் ஞாயும் யாராகி யரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக்கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப்பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே...'


என்கிறார்.

காதலர்களின் இனிய இணைப்பிற்கு இதைவிட வேறு என்ன உவமை சொல்லமுடியும். இந்த உவமைதான் இலக்கியச் சுவைப்பிற்கு இன்பத்தைத் தருகின்றது.

இன்பத்தில் ஆழ்ந்திருக்கும் இனிய வேளையில் கொஞ்சம் சோகமும் நிழலாடுகிறது. சோகத்திற்குக் காரணம் சுகமான இந்தப் பாடலை எழுதியவர் தன் பெயரை எழுத மறந்துவிட்டது தான். அதனால் புலவர் பாடிய உவமையாலேயே 'செம்புலப் பெயல் நீரார்' என்ற பெயரைத் தொகுத்தவர் சூட்டிவிட்டார்.

இவரைப் போலவே அன்பின் ஆழத்தை வெளிப்படுத்திய மற்றொரு புலவர். உவமையால் இவருக்கு வந்த பெயர் 'ஓரேர் உழவனார்' என்பதாகும்.

இந்தப் பெயருக்குக் காரணமான கவிதைக் காட்சியைப் பாருங்கள்...

வினையே ஆடவர்க்கு உயிராகப் போற்றுபவன் தலைவன். 'வினை' என்றால் 'செய்யும் தொழில்'. அந்தத் தொழில் தான் ஆடவர்க்கு உயிர். அதைப்போல் வீட்டிலிருக்கின்ற பெண்ணுக்கு ஆடவர் தான் உயிர்.

இந்த உயர்ந்த வாழ்க்கையைத் தான் குறுந்தொகைப் பாடல் ஒன்று பதிவு செய்திருக்கின்றது.

இங்கே தலைவன் வினை முடித்து வருகிறான். பார்க்க வருவது தலைவியை அல்லவா! அதுவும் பிரிவுக்குப் பிறகு வரும் சந்திப்பு அல்லவா!. குதிரை பூட்டிய தேரை வேகமாகச் செலுத்துகிறான். இந்த வேகம் தான் 'ஓரேர் உழவனைப் போல்' இருக்கிறதாம்.

சுருங்கச்சொல்லி விளங்க வைப்பதற்குத்தானே புலவர்கள் உவமையைப் பயன்படுத்துகின்றார்கள். அது போலத்தான் இந்த உவமையும்.

அப்பொழுது தான் மழை பெய்திருக்கின்றது. அவனிடம் ஓர் ஏர் மட்டுமே இருக்கின்றது. ஈரப்பதம் காய்வதற்கு முன் உழுது விதைத்துவிட வேண்டும் என்கிற வேகம் அவனுக்கு வருகிறது. இந்த உழவனைப் போலத்தான் தலைவனது வேகமும் இருந்தது என்பதை விளக்குவதற்குத்தான்...

'ஈரம்பட்ட செவ்விப் பைம் புனத்து
ஓர் ஏர் உழவன் போல...'


என்ற உவமையைப் பயன்படுத்துகின்றார் புலவர்.
புலவருக்கு இந்த உவமைதான் பெயராகிப் போனது.

இப்படி சொந்தப் பெயர் மறந்து, வாழ்வில் சிறந்த போது வந்த பெயர் நிலைத்து விடுகின்றது.

இப்படித்தான் குறுந்தொகையில் சில பாடல்கள் புலவர்களின் பெயராகி இலக்கிய இன்பத்தை எடுத்துக்காட்டுகின்றது.

இல்லற மாண்பு


நல்லறம் புரிவதற்குத்தான் இல்லறம். அன்பால் இணைந்த காதலர்கள் திருமணம் புரிந்து இல்லறத்திற்குள் நுழைகின்றனர். அந்த இல்லறத்தில் நிகழ்ந்த ஒரு காட்சி.

திருமணம் புரிந்த புதிய காலைப்பொழுது, கணவனின் அன்பு அரவணைப்பில் மீண்டு வந்து சமைக்கத் தொடங்குகிறாள்.

இதுவரை பிறந்த வீட்டில் அடுப்படிப்பக்கமே போகாதவள். அப்படி ஒரு செல்வச் செழிப்பில் வளர்த்தவள். அவள்தான் திருமணம் முடிந்ததும் கணவனுக்குப் பிடித்தமான மோர்க் குழம்பு வைக்கிறாள்.

தன் காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களால் கட்டித்தயிரை மெதுவாகப் பிசைகின்றாள். அப்போது கட்டியிருந்த பட்டாடை சட்டென்று நழுவுகின்றது. மற்றொரு கையாலே சரிசெய்து கொண்டு தாளிக்கின்றாள். தாளிக்கும் போது உண்டான புகை, 'கயல்' போன்ற அவளது விழிகளை கலங்க வைக்கின்றது. துடைத்துக் கொள்கிறாள்.

இப்படி ஆசையோடு சமைத்து முடிப்பதற்குள்ளேயே வெளியில் சென்ற கணவன் வந்து விட்டான். முகத்திலும், ஆடையிலும் அழுக்கு அப்பியிருக்கின்றது. உணவைப் பரிமாறுகிறாள். அவனும் அவளது புறத்தோற்றத்தைக் கண்டு வெறுக்காமல் அகத்தின் அன்பினை நினைத்து இனிது, இனிது என்று பாராட்டிக் கொண்டே சாப்பிடுகிறான்.
அந்தப் பாராட்டைப் பெற வேண்டும் என்று தானே அவள் இப்படி விரும்பிச் சமைத்தாள். இந்த இனிய இல்லறக் காட்சியினைத்தான்....

'முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅது உடிஇக்
குவளை உண்கண் குய்ப்புகை கமழத்
தான் துழந்து இட்ட தீம்புளிப்பாகர்
இனிது எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே!'


என்று கூடலூர் கிழார் என்னும் புலவர் பாடியுள்ளார்.  

இந்த இல்லற வாழ்வின் இனிமையை இலக்கிய உள்ளம் படைத்த எவராலும் மறக்க முடியுமா?

இப்பாடலில் இன்னொரு சுவையும் ஒட்டியிருக்கின்றது.

இந்த இனிய இல்லறக் காட்சியினை தலைவியை வளர்த்த செவிலித்தாய் தூரத்திலிருந்து பார்க்கிறாள். பார்த்த இந்தக் காட்சியை தலைவியின் தாய்க்குப் போய்ச் சொல்லுகிறாள். அந்தத்தாய்தான் 'நற்றாய்' என்று இலக்கியம் போற்றுகின்றது.

மகளின் மணவாழ்க்கையைக் கேட்ட நற்றாய் மகிழ்ச்சியடைகிறாள். தாய்க்கு இதைவிட வேறு என்ன பேறு வேண்டும்.

படிக்கின்ற போது கண்களில் ஈரம் அரும்புகின்றது. ஆம், அதுதான் ஆனந்தக் கண்ணீர்.

இன்று திருமணம் முடிக்கும் மணமக்களுக்கு இதைவிட அறிவுரை சொல்ல வேறு ஏதேனும் இருக்கமுடியுமா.  

வாழ்க்கையைத் தானே இலக்கியம் சொல்கிறது.

சங்க இலக்கியங்களில் காணலாகும் சில பழக்கங்கள் இன்று ஒத்துவராது என்று ஒதுக்கித்தள்ளலாம். இயந்திரத்தன்மை கொண்டதல்ல மனித வாழ்க்கை.

இது நாகரிக காலம் என்று பெருமையோடு சொல்கிறோம். இப்போதுதான்- எப்போதும் இல்லாத அளவுக்கு வன்முறைகளும், சமூகக் கொடுமைகளும் அதிகமாக நடக்கின்றன. இந்தக் கொடுமைகளைத் தடுப்பதும் முன்னோர்கள் வகுத்துத் தந்த சில வாழ்க்கை முறைகளுக்குத் திரும்ப வேண்டியுள்ளது.

சங்க இலக்கியங்களைக் கொஞ்சம் புரட்டிப் படிப்போம். வாழ்வில் இன்பம் சேர்ப்போம்.
(இன்பம் தொடரும்)

மூலக்கதை