TUKAR திட்டத்தில் தோல்வி: வணிகர்கள் தான் காரணம்- அமைச்சர்

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
TUKAR திட்டத்தில் தோல்வி: வணிகர்கள் தான் காரணம் அமைச்சர்

 

கோலாலம்பூர், 25 ஆகஸ்டு- துக்கார் திட்டத்தின் கீழ் பல வணிகர்கள்  பல ஆயிரங்களை இழந்துள்ள போதும், அத்திட்டத்தை  உள்நாட்டு வாணிபம், கூட்டுறவு, மற்றும் பயனீட்டாளர் அமைச்சர் டத்தோ ஹம்சா சைனுடின் தற்காத்துப் பேசியுள்ளார்.  

 மாறாக, துக்கார் திட்டம் தோல்வியடைந்தால், அதற்குச் சம்பந்தப்பட்ட அந்த கடை உரிமையாளர் தான் காரணம் என அமைச்சர் குற்றம் சாட்டினார்.  

  “துக்கார் திட்டம் வெற்றியடையாவிட்டால், அதற்கு அந்த வியாபாரிகள் தான் காரணம். நாம் வியாபாரம் செய்யும் போது, பொதுமக்களுடனான தொடர்பு மிகவும் அவசியம். சில நேரங்களில் கடை உரிமையாளர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளால், பொதுமக்களுக்கு அங்கு போக பிடிக்காமல் போகலாம்” என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும், துக்கார் திட்டத்தில் பங்கு பெற்ற 95% கடை உரிமையாளர்கள்  வெற்றியடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

 துக்கார் திட்டம், பூமிபுத்ராக்களும், பூமி புத்ரா அல்லாதவர்களும் தங்களின் பழைய பாணியிலான கடையை உருமாற்றம் செய்வதற்காக அறிமுகம் செய்யப்பட்டது.

 அண்மையில், இத்திட்டத்தில் பங்கு பெற்ற பெரும்பாலான  வணிகர்கள் தோல்வியடைந்ததாகவும், கடையை மூடும் அளவுக்குத் தள்ளப்பட்டதாகவும், செய்தி வெளியிட்ட மலேசியன் இன்சைடர் பத்திரிகையை அவர் சாடினார்.

அப்பத்திரிகை வெளியிட்ட செய்தி 1 விழுக்காட்டு மக்களையே உட்படுத்தியதாகும். 

 

கடந்த 2013-ஆம் ஆண்டு தேசியக் கணக்காய்வாளட் அறிக்கையின் படி, துக்கார் திட்டத்தில் பங்கு பெற்ற 70 கடைகளில் 26% விழுக்காட்டு கடைகள் வியாபாரத்தில் நஷ்டத்தைத் தழுவியதாகவும், மேலும், 14 விழுக்காட்டினர், கடையை மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது. 

மூலக்கதை