அதள பாதாளத்தில் ரிங்கிட்டின் மதிப்பு: வீழுமா? மீளுமா?

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
அதள பாதாளத்தில் ரிங்கிட்டின் மதிப்பு: வீழுமா? மீளுமா?

நேற்று முன்தினம் 3.97, நேற்று 4.00, இன்று முற்பகலில் 4.01. கடந்த மூன்று நாட்களாக நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துக்கொண்டிருக்கும் டாலருக்கு நிகரான ரிங்கிட்டின் வீழ்ச்சிப் பட்டியல் இவை.

நாட்டில் நிலவும் எந்தவொரு பொருளாதார மாற்றத்தையும்  மக்களுக்குத் தெரியபடுத்த வேண்டியது, அரசாங்கத்தின் தலையாயக் கடமையாகும். ஏனெனில், பொருளாதாரம் சீர்குலைந்தால் முதலில் பாதிக்கப்படுவது  மக்கள் தான்.  

ஆனால் தற்போது என்ன நிலவுகிறது.

நாடு பொருளாதார வீழ்ச்சியை நோக்கிச் சென்றுக்கொண்டிருக்கிறது என்பதை இன்னமும் நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க அரசாங்கம் தயாராய் இல்லை.

பொருளாதாரமே நாட்டின் முதுகெலும்பு. நாட்டின் பொருளாதார நிலைமை புரியாவிட்டால் அது மக்களுக்குக் குழப்பத்தையே ஏற்படுத்தும். அதற்கேற்றால் போல் தான் அண்மைய சில நாட்களாக அமைச்சர்கள் மற்றும் நிதி நிறுவனத் தலைவர்களின் கூற்றும் இருந்து வருகிறது.

ரிங்கிட் விலை வீழ்ச்சியால் நாட்டின் சுற்றுலாத்துறைக்கு நன்மையே என கருத்து வெளியிட்டுள்ளார், சுற்றுலா துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ நஸ்ரி அசிஸ்.

பொருளாதாரம் குறித்த அடிப்படை அறிவைப் பெற்ற பலர், அமைச்சரின் இந்த கருத்துகளுக்கு முகநூல் வழி கடும் விமர்சனங்களை வெளியிட்டு வருவதை நம்மில் பலர் பார்த்திருக்கலாம்.

 அதே போல், ரிங்கிட் விலை வீழ்ச்சியடைந்தாலும், அமெரிக்க டாலர் மதிப்பில் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களைக் கொண்டு, 1எம்.டி.பி கடன்களை 6 மாதத்திற்குள் குறைக்க முடியும் என்கிறார் அதன்  தலைமுறை அதிகாரி  அருள் கந்தா.

இப்படியாக, ரிங்கிட்டின் வீழ்ச்சி குறித்து இதுவரை மக்களை சமாதானப்படுத்தும் வகையிலேயே நமது தலைவர்கள் கருத்துக்கள் வெளியிட்டு வருகின்றனர். 

தலைவர்கள் சமாதானக் கருத்துக்கள் கூறுவதும், ஊடகங்கள் ரிங்கிட் விலை வீழ்ச்சியை முதல் பக்கத்திலேயே பிரசுரிப்பதும் என நாட்டிலுள்ள நடுத்தர மற்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள் நாட்டின் நிதி நிலைமை குறித்த குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதைக் கண்கூடாகக் காண முடிகிறது.

ஒவ்வொரு குடிமகனுக்கும் நாட்டின் நிதி  நிலைமையை அறிந்துக்கொள்ள உரிமை உண்டு.

நாட்டின்  பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் தோல்வி கண்டுள்ளதாலேயே ரிங்கிட்டின் விலை வீழ்ச்சி கண்டுள்ளதை அரசாங்கம் பகிங்கிரமாகவே  ஒப்புக்கொள்ள வேண்டும். இதன்மூலம், மக்கள் நடப்புப் பொருளாதாரச் சூழலை அறிந்து, தங்கள் எதிர்காலத்தை  திட்டமிட முடியும். நாட்டின் பொருளாதார நிலை குறித்த தவறான தகவல்களைப் பரப்புவது,  மக்களை ஏமாற்றுவதோடு, அவர்களை கடும் நெருக்கடிகளுக்கு இட்டுச் செல்லும். 

நாட்டின் ரிங்கிட் மதிப்பு நாளுக்கு நாள் வீழ்ச்சி கண்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் 1 டாலருக்கு நிகராக ரிங்கிட்டின் மதிப்பு 3 ரிங்கிட்டாக இருந்தது.  பின்னர் இந்த எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து 1 டாலருக்கு 3.60 ரிங்கிட் ஆனது. தற்போது இந்நிலை மேலும் மோசமாகி டாலருக்கு, ரிங்கிட்டின் மதிப்பு 4.1-ஆக படுவீழ்ச்சி கண்டுள்ளது, இந்நிலை 1997-ஆம் ஆண்டு நிலவிய ஆசிய பொருளாதார நெருக்கடிக்கு ஈடானது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

 நாட்டைச் சூழ்ந்திருக்கும் அரசியல் சார்ந்த நெருக்கடிகள், தலைவர்களைச் சூழ்ந்துள்ள விவகாரங்கள்,  அந்நிய முதலீட்டில் சரிவு, வெளிநாட்டுக் கடன் அதிகரிப்பு, அனைத்துலக எண்ணெய் விலை சரிவு,  போன்றவை ரிங்கிட் மதிப்பு வீழ்ச்சியடைவதற்கு முக்கியக் காரணங்களாக அடுக்கி வைக்கப்படுகின்றன. 

மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவது மற்றும் நாட்டைச் சூழ்ந்துள்ள  ஊழல் காரணமாக நம்பிக்கை இழந்த முதலீட்டாளர்கள் வெளியேறிவருவதால் நாட்டில் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக MTUC எனப்படும் மலேசியத் தொழிற்சங்க காங்கிரஸ் கவலை தெரிவித்துள்ளது. 

சுற்றுலா மற்றும் கலை பண்பாட்டுப் பாரம்பரிய அமைச்சர் டத்தோ ஶ்ரீ நஸ்ரி அசிஸ் கூறுவது போல், ரிங்கிட்டின் வீழ்ச்சியால் சுற்றுலாத் துறை வளர்ச்சியடையும் என்பதை ஒப்புக்கொண்டாலும், மலேசியா சுற்றுலாத் துறையை மட்டுமே நம்பியிருக்கும் நாடு அல்ல. நம் நாட்டிற்கு வருகைப் புரியும் சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமே இது நன்மை பயக்கும். அவர்களின் பண மதிப்புடன் ஒப்பிடுகையில், ரிங்கிட்டின் விலை குறைவு என்பதால், குறைவான விலையிலேயே பொருட்களை வாங்கிச் செல்ல முடியும். ஆனால், இங்கிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் மலேசியர்கள் அதிகம் செலவிட நேரிடும். ரிங்கிட்டின் விலை வீழ்ச்சியால் சுற்றுலா துறை தவிர மற்ற எல்லாத் துறைகளும் வீழ்ச்சியடையும்.  

இது தவிர வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிக்கும். இதனால் மலேசியாவில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் விலை அதிகரிக்கும்.  நாட்டின் நிதி நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவது நாட்டு மக்களைப் பெரும் கவலைக்கொள்ள வைத்துள்ளது. கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நாட்டில் அமல்படுத்தப்பட்ட GST எனப்படும் பொருள் மற்றும் சேவை வரி காரணமாக, பொருட்களின் விலை குறையும் என கூறப்பட்ட வேளையில், அது அதிகரிக்கவே செய்தது. இந்த அதிருப்தியே மக்களிடையே இன்னமும் அகலாத நிலையில், ரிங்கிட் விலை வீழ்ச்சி அரசாங்கம் மீதான அதிருப்தியை மேலோங்கவே செய்து வருகிறது.

எவ்வளவு நாளைக்குத் தான் இந்த சமாளிப்புகள்?

நாட்டின் நிதிநிலைமை குறித்த உண்மையான நிலவரங்களைத் தெரிந்துக்கொள்ள மலேசியர்கள் ஆவலாய் காத்திருக்கிறார்கள். செலவுகளைக் குறைக்கவும், எதிர்காலத்திற்குத் திட்டமிடவும், மேலும் பல நெருக்கடிகளில் வீழ்வதிலிருந்து தடுத்துக்கொள்ளவும், நாட்டின் நிதிநிலைமை அறிந்து வைத்திருப்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமையும் கூட. 

மூலக்கதை