புதுச்சேரியில் நூலக பயன்பாடு பற்றிய மாநாடு– துவங்கி வைக்கிறார் அப்துல் கலாம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
புதுச்சேரியில் நூலக பயன்பாடு பற்றிய மாநாடு– துவங்கி வைக்கிறார் அப்துல் கலாம்

புதுச்சேரி: புதுச்சேரியில் முன்னாள் குடியரசுத்தலைவரான அப்துல்கலாம் நாளை நூலக மாநாட்டை தொடங்கிவைக்கிறார்.

இதுகுறித்து புதுச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் இயக்குனர் பியர் கிரர்டு, டெல்லியில் உள்ள டெல்நெட் நிறுவன இயக்குனர் கவுர் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் அளித்த பேட்டியில்,

''நூலகங்கள் சமுதாய வளர்ச்சிக்கு அடிப்படையாக இருக்கின்றன. நூலக பயன்பாட்டு எளிமை, நூல்களின் வளம், நூலக கட்டமைப்பு ஆகியன நூலகங்களுக்கு அடிப்படை தேவை. தொழில்நுட்ப வளர்ச்சி நூலகங்களை தொடர்புகொள்ள எளிய வழிமுறைகளை நமக்கு கொடுத்திருந்தாலும் பல நூலகங்களுக்கும், நூலகர்களுக்கும் தொழில்நுட்ப வளர்ச்சி இன்னும் போய் சேரவில்லை.

இதனை கருத்தில் கொண்டு அனைத்து நூலகங்களையும் ஒரே மையத்தில் கொண்டு வருதல், நூலகங்களை இணைத்தல், நூலக மின்மயமாக்கம், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தகுந்தவாறு நூலகங்களையும் வளப்படுத்துதல், வாசகர் களுக்கு நூலக பயன்பாட்டை எளிமையாக்குதல் முதலான கருதுகோள்களின் அடிப்படையில் புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனமும், டெல்லியில் உள்ள டெல்நெட் நிறுவனமும் இணைந்து அறிவு வளர்ச்சி, நூலகவியல் மற்றும் தகவல் கட்டமைப்பு என்ற தலைப்பில் தேசிய மாநாடு ஒன்றை நாளை முதல் 11 ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்த மாநாடு நூலகங்களுக்கிடையிலான தொடர்பு உருவாக்கத்தையும் நூலக தகவல் பரிமாற்றத்தையும் மையப்படுத்தி செயல்படுகின்றது. இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளிலிருந்தும் இந்தியாவில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களிலிருந்தும் 350 க்கும் மேற்பட்ட அறிஞர் களும், மாணவர்களும் இதில் கலந்துகொள்கிறார்கள்.

இந்த மாநாட்டை ஆனந்தா இன் ஓட்டலில் நாளை காலை 10மணிக்கு முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றுகிறார். மாநாட்டில் நூலக பயன்பாடு பற்றிய கண்காட்சியும் நடக்கிறது''என்று தெரிவித்தனர்.

மூலக்கதை