பதுங்கி பாய்ந்த இந்தியா.. ரோகித் ஷர்மா சதம், ரெய்னா அதிரடி உதவியுடன் 302 ரன்கள் குவிப்பு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பதுங்கி பாய்ந்த இந்தியா.. ரோகித் ஷர்மா சதம், ரெய்னா அதிரடி உதவியுடன் 302 ரன்கள் குவிப்பு!

மெல்போர்ன்[1]: பச்சை சட்டை போட்ட வங்கதேச புலிகளின் தாக்குதலால், ப்ளூ சட்டை போட்ட வரிப்புலிகள் சற்று பதுங்கியிருந்த நிலையில், கடைசி கட்ட ஓவர்களில் பாய்ந்து குதறி எடுத்தனர் இந்திய வீரர்கள். இதனால் 302 ரன்களை குவித்து, வங்கதேசத்துக்கு எதிராக தொடை தட்டியுள்ளது இந்தியா.

உலக கோப்பை காலிறுதி போட்டியில் டாசில் வெற்றி பெற்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்த இந்தியாவுக்கு ரோகித் ஷர்மா, ஷிகர் தவான் நல்ல தொடக்கம் தந்தனர். இந்த ஜோடி 75 ரன்கள் சேர்த்திருந்தபோது, தவான் ஸ்டம்பிங்காகி அவுட் ஆனார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம், விராட் கோஹ்லி வெறும் 3 ரன்களில் நடையை கட்டினார். சற்று நம்பிக்கையளித்த ரஹானேவும் மோசமான ஒரு ஷாட் மூலம் 19 ரன்களில் அவுட் ஆனார்.

28 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்களை மட்டுமே இந்தியா சேர்த்திருந்தது. எனவே மேற்கொண்டு விக்கெட்டை பறிகொடுத்து விடக்கூடாது என்பதற்காக இந்திய வீரர்கள் ரோகித் மற்றும் ரெய்னா இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். ஆனால், ஓவர்கள் முடிவடைய உள்ள நிலையில், ரோகித் ஷர்மா மற்றும், ரெய்னா அதிரடியை ஆரம்பித்தனர். இதற்கு வசதியாக 35வது ஓவரில் பேட்டிங் பவர் பிளேயை இந்தியா வாங்கியது.

நன்கு ஆடிக் கொண்டிருந்த சுரேஷ் ரெய்னா 65 ரன்கள் எடுத்திருந்தபோது மோர்டசா பந்து வீச்சில் முஸ்பிகுர் ரஹிமிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

இதைத் தொடர்ந்து டோணி களமிறங்கினார். ஆனால் 11 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் டோணி தஸ்கின் அகமது பந்து வீச்சில் நாசிர் ஹொசைனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். முன்னதாக 126 பந்துகளில், 137 ரன்கள் குவித்த ரோகித் ஷர்மாவும், அதே பவுலரால் கிளீன் பௌல்ட் செய்யப்பட்டார்.

ஆனால் இறுதி கட்டத்தில் ரவீந்திர ஜடேஜா காட்டிய அதிரடியால் இந்திய அணி 300 ரன்களை தாண்டியது. 50 ஓவர்கள் முடிவில், இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்கள் எடுத்திருந்தது. 10 பந்துகளில் 23 ரன்களுடன் ஜடேஜாவும், 3 ரன்களுடன் அஸ்வினும் களத்தில் நின்றனர். அந்த அணியின் தஸ்கின் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 300 ரன்களை சேஸ் செய்வது கஷ்டமான காரியம் என்ற நிலையில், வங்கதேசம்[2] பேட்டிங் செய்ய உள்ளது.

References^ Topic: மெல்போர்ன் (tamil.oneindia.com)^ Topic: வங்கதேசம் (tamil.oneindia.com)

மூலக்கதை