இந்திய உள்விவகாரங்களில் இலங்கைத் தூதர் தலையிடக் கூடாது: நாரயணசாமி

NEW INDIA NEWS  NEW INDIA NEWS

காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காவிடில், இந்தியா தனிமைப்படுத்தப்படும் என்று கூறிய இலங்கைத் தூதர் கரியவாசத்துக்கு மத்திய இணை அமைச்சர் வி. நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய உள்விவகாரங்களில் தலையிட அவருக்கு எந்தவித உரிமையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

காரைக்காலில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் கூறியது:

இலங்கை சிறையில் உள்ள காரைக்கால் மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மீனவர் பிரச்னை தொடர்பாக அடுத்த வாரம் இந்தியாவுக்கு வரும் இலங்கை அதிபரின் சகோதரர் கோத்தபய ராஜபட்ஷவிடம் விரிவாக பேசப்படும்.

இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பது தொடர்பான தமிழக மக்களின் உணர்வுகள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

காரைக்காலில் கடல்சார் பல்கலைக்கழகம் மூலம் கடல்சார் கல்வி கற்கும் கூடம் வரும் ஜனவரியில் தொடங்கப்படவுள்ளது.

இதேபோல், காரைக்காலில் பெட்ரோலியத் துறை மூலம் பெட்ரோலியம் சம்பந்தமான ஆராய்ச்சி செய்வதற்கான பயிற்சிக் கூடமும் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கவில்லையெனில், இந்தியா தனிமைப்படுத்தப்படும் என இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசம் கூறியது கண்டனத்துக்குரியது.

இந்திய உள் விவகாரங்களில் தலையிட அவருக்கு உரிமை கிடையாது.

இது குறித்து இந்திய அரசின் கண்டனத்தை புதுடெல்லி வரவுள்ள கோத்தபாய ராஜபக்ஷவிடம் தெரிவிக்கப்படும் என்றார் நாராயணசாமி.

மூலக்கதை