பிரதமர் பங்கேற்பது பற்றி முடிவெடுக்க காலஅவகாசம் உள்ளது: ப. சிதம்பரம்

NEW INDIA NEWS  NEW INDIA NEWS
பிரதமர் பங்கேற்பது பற்றி முடிவெடுக்க காலஅவகாசம் உள்ளது: ப. சிதம்பரம்

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பது குறித்து இறுதி முடிவு எடுக்க இன்னும் காலஅவகாசம் உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக தில்லியில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சிதம்பரம் பதிலளிக்கையில்,

"இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பது குறித்து முடிவு எடுப்பது தொடர்பாக ஆலோசித்து வருவதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இந்த மாநாட்டில் பிரதமர் பங்கேற்கக் கூடாது என்று சில மத்திய அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதையும் நான் அறிவேன்.

பிரதமர் பங்கேற்பதா? இல்லையா? என்ற இறுதி முடிவு எடுக்க இன்னும் கால அவகாசம் உள்ளது' என்று சிதம்பரம் கூறினார்.

காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க காங்கிரஸ் உயர்நிலைக் குழு அண்மையில் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து மாநாட்டில் பிரதமர் பங்கேற்கக் கூடாது என்று மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே. வாசன் அவரைச் சந்தித்து வியாழக்கிழமை வலியுறுத்தினார்.

நவம்பர் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதிவரை கொழும்பில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் ஒருமித்த குரலில் வலியுறுத்தி வருகின்றன.

மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழக சட்டப்பேரவையில் அண்மையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை