பாபர் மசூதி இடிப்பு வழக்கு: நீதிபதி பாதுகாப்பு கேட்கிறார்

தினமலர்  தினமலர்
பாபர் மசூதி இடிப்பு வழக்கு: நீதிபதி பாதுகாப்பு கேட்கிறார்

புதுடில்லி: உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிபதி, பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளார்.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்கு, அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

விசாரணை



இந்நிலையில், 1992ல், அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கை, லக்னோவில் உள்ள சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், பா.ஜ., மூத்த தலைவர்கள், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதியின் பதவிக் காலம் முடிய உள்ளது. இதையடுத்து, 'வழக்கின் விசாரணை முடியும் வரையில், அவருடைய பதவிக் காலத்தை நீட்டிக்க வேண்டும்; ஒன்பது மாதங்களுக்குள் வழக்கின் விசாரணையை முடிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம், உத்தரவிட்டிருந்தது.ஆனால், இது தொடர்பாக, உ.பி., அரசு எந்த உத்தரவையும் பிறப்பிக்க வில்லை.

இந்நிலையில், நீதிபதி, ஆர்.எப். நரிமன் தலைமையிலான அமர்வில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமர்வு கூறியதாவது:சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது உள்பட, ஐந்து கோரிக்கைகளை அவர் முன்வைத்துள்ளார். அவை ஏற்கக் கூடியதாக உள்ளன.

இரண்டு வாரம்



இவற்றை நிறைவேற்றுவது குறித்து, மாநில அரசு முடிவு எடுக்கலாம். மேலும், சிறப்பு நீதிபதியின் பதவிக் காலத்தை நீட்டிப்பது தொடர்பான உத்தரவை, இரண்டு வாரங்களுக்குள் பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அமர்வு கூறியுள்ளது.

மூலக்கதை