இந்தியாவில் வறுமையால் வாடுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது: பிரான்ஸ் வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை

தினகரன்  தினகரன்
இந்தியாவில் வறுமையால் வாடுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது: பிரான்ஸ் வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை

பாரிஸ்: இந்தியாவில் வறுமையால் வாடுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என ஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி அங்குள்ள இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். 3 நாடுகளுக்கு 5 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி முதலில் தலைநகர் பாரிஸ் அருகே உள்ள சாண்டோரின் அரண்மணையில் அதிபர் மேக்ரானுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் தீவிரவாதம், பருவநிலை மாற்றம், சுற்று சூழல் பாதுகாப்பு போன்ற அம்சங்கள் இடம்பெற்றன. காஷ்மீர் பிரச்சனை குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். அப்போது 3வது நாட்டின் தலையீடு இல்லாமல் காஷ்மீர் பிரச்சனையை பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள அதிபர் மேக்ரான் யோசனை வழங்கினார். தொடர்ந்து பிரான்ஸ் பிரதமர் எடோ பிலிப்புடன் மோடி ஆலோசனை நடத்தினார். இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ரபேல் போர் விமானிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது இந்தியாவுக்கு வழங்கவேண்டிய 36 ரபேல் போர் விமானங்களில் முதல் விமானம் வழங்க அதிபர் மேக்ரான் ஒப்புதல் வழங்கினார். இதனிடையே, 45வது ஜி-7 மாநாடு நாளை பிரான்சில் தொடங்குகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இந்த நிலையில், பாரிஸில் உள்ள யுனேஸ்கோ தலைமையகத்தில் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அதில் அவர் கூறியதாவது: \' புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு மக்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர் என்று கூறியுள்ளார். அதேபோல, இந்தியாவும் பிரான்சும் எப்போதும் ஒன்றுக்கொன்று ஆதரவாகவும் இணைந்தும் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். இந்தியாவில் வறுமையால் வாடுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்றும், இந்தியாவில் புதியதாக தொழில் தொடங்குவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வேறுவதாகவும் அவர் தெரிவித்தார். தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியா கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, மேலும் உலகிலேயே மிகப்பெரிய மருத்துவ திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருகிறது என தெரிவித்தார். இதையடுத்து பேசிய அவர், 2025-ம் ஆண்டில் காசநோய் இல்லா இந்தியா உருவாக்கப்படும் என தெரிவித்தார். அதேபோல தீவிரவாதத்தை இந்தியா இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது எனவும் அவர் தெரிவித்தார். பாரீஸ் பிரகடன இலக்கை அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்குள் இந்தியா எட்டும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து பேசிய அவர், மக்களுக்கு செய்ய முடியாத பல்வேறு நலத்திட்டங்களை கடந்த 5 ஆண்டு ஆட்சியில் நிறைவேற்றியுள்ளோம் எனவும்  புதிய அரசு பதவியேற்ற 75 நாட்களில் துணிச்சலான பல முடிவுகளை எடுத்தது என தெரிவித்துள்ளார். ஊழல் பயங்கரவாதத்திற்கு எதிராக இதற்கு முன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை\' என அவர் உரையாற்றினார்.

மூலக்கதை