புதிய இந்தியா உருவாக்கியதில் கர்வம்: மோடி

தினமலர்  தினமலர்
புதிய இந்தியா உருவாக்கியதில் கர்வம்: மோடி

பாரீஸ் : புதிய இந்தியாவை உருவாக்கியதில் கர்வம் கொள்கிறேன் என பாரீசில் இந்திய வம்சாவளியினரிடையே பேசிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி, இன்று (ஆக.,23) பாரீசில் உள்ள யுனெஸ்கோ தலைமை அலுவலகத்திற்கு சென்றார். அப்போது மோடிக்கு பூர்ணகும்ப மரியாதையுடனும், நாதஸ்வர - மேளம் முழங்க தமிழக பாரம்பரிய முறைப்படியும் வரவேற்பு அளிக்கப்பட்டது. யுனெஸ்கோ அலுவலகத்தில் அதன் தலைவர் ஆண்டிரி அசோவ்லேவை மோடி சந்தித்தார். பின்னர் அங்கு நடைபெற்ற விழாவில் இந்திய வம்சாவளியினரிடையே மோடி உரையாற்றினார்.


அப்போது பேசிய அவர், விமான விபத்தில் உயிரிழந்த இந்தியாவின் சிறந்த அணு இயற்பியலாளரான ஹோமி பாபாவை இந்நேரத்தில் தலை வணங்குகிறேன். இந்தியா தற்போது முன்னேறி வருகிறது. நாங்கள் வெறும் ஆட்சி மட்டும் நடத்தவில்லை. புதிய இந்தியாவை கட்டமைத்து வருகிறோம். புதிய இந்தியாவை உருவாக்கியதில் கர்வம் கொள்கிறேன். அளித்த வாக்குறுதிகளை விரைவாக நிறைவேற்றி வருகிறோம். பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்வதில்லை.

கால்பந்தாட்ட பிரியர்களின் தேசத்திற்கு நான் வந்துள்ளேன். கோலின் (goal) முக்கியத்துவம் பற்றி உங்களுக்கு தெரியும். அது அளப்பிட முடியாத சாதனை. இதற்கு முன் நடக்கவே முடியாது என கூறப்பட்டவற்றை கடந்த 5 ஆண்டுகளாக இலக்காக நிர்ணயித்து, அதை அடைந்துள்ளோம். புதிய இந்தியாவில் ஊழல், சலுகை, மக்கள் பணத்தை கொள்ளையடித்தல், பயங்கரவாதம் ஆகியவற்றிற்கு எதிராக, இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய அரசு பதவியேற்று 75 நாட்களுக்குள் பல திடமான, துணிச்சலான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா - பிரான்ஸ் இடையே உறவு நிலையாக உள்ளது. இந்தியாவும் - பிரான்சும் எப்போதும் ஒன்றுக்கு ஒன்று ஆதரவாக இணைந்து செயல்பட்டு வருகின்றன. உலகிலேயே பெரிய மருத்துவ திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருகிறது. 2015 ல் காசநோய் இல்லா இந்தியா உருவாக்கப்படும். இவ்வாறு மோடி பேசினார்.


மூலக்கதை