துவக்கம்! வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி... தவணையில் பணம் செலுத்தும் முறை அறிமுகம்

தினமலர்  தினமலர்
துவக்கம்! வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி... தவணையில் பணம் செலுத்தும் முறை அறிமுகம்

கடலுார்:கடலுார் நகராட்சியில், அனைத்து வீடுகளுக்கும், முன் பணமின்றி, குடிநீர் இணைப்பு வழங்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.

கடலுார் நகராட்சியில் 2 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். மொத்தம் 45 வார்டுகள் உள்ளன. 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடலோர மாவட்டம் என்பதால், பல கிராமங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கொள்ளிடத்தில் இருந்து எடுக்கப்படும் கூட்டு குடிநீர் மற்றும் உள்ளூரில் எடுக்கப்படும் தண்ணீருடன் கலந்து வினியோகிக்கப்படுகிறது.கடலுார் நகராட்சியில் தற்போது 11,575 குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஏராளமானோர் நகராட்சியில் வைப்புத்தொகை செலுத்தி அனுமதி பெறாமலேயே உள்ளூர் அரசியல் கட்சியினரை கொண்டு, அவர்களாகவே இணைப்பு கொடுத்து கொண்டனர். இதுபோன்று ஏராளமான இணைப்புகள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வருகின்றன. இதனை நகராட்சியால் கட்டுப்படுத்த முடியவில்லை. குடிநீர் அத்தியாவசிய தேவை என்பதால், நகராட்சியால் பொதுமக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. மேலும் நகராட்சிக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்ப்பதற்கு வீட்டின் உரிமையாளர்கள் முன்பணம் செலுத்தாமல், குடிநீர் இணைப்பு கொடுத்துவிட்டு, அதன் பின்னர் ஆகும் செலவை 10 தவணையாக நகராட்சிக்கு செலுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.ஏற்கனவே நடைமுறையில் இருந்ததுபோல, வீடுகளின் பரப்பளவை பொறுத்து வைப்புத்தொகை வேறுபடும். வைப்புத் தொகை மற்றும் பைப்புகள் செலவுத்தொகை போன்றவற்றை மொத்தமாக கணக்கிட்டு, அதை 10 தவணையாக வீட்டின் உரிமையாளர்கள் செலுத்தலாம். இந்த திட்டத்தில் மொத்தம் 15,206 இணைப்புகள் கொடுக்க முடிவுசெய்து, அரசிடம் அனுமதி பெறப்பட்டது. அதன்படி நிறைவேற்ற ஒப்பந்ததாரர்களுக்கு ஒர்க் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. கடலுார் நகராட்சியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி துவங்கி நடந்து வருகிறது. விரைவில் இந்த பணி முழுவதும் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.பாதாள சாக்கடை திட்டத்தில் தவணை முறையில் இணைப்பு கொடுக்கும் பணி அறிமுகம் செய்தும் பெரிய அளவில் மக்களிடம் வரவேற்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை