அஜ்மான் நாட்டில் பா.ஜ. கூட்டணி கட்சித்தலைவர் செக் மோசடி வழக்கில் கைது : வயநாட்டில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்டவர்

தினகரன்  தினகரன்
அஜ்மான் நாட்டில் பா.ஜ. கூட்டணி கட்சித்தலைவர் செக் மோசடி வழக்கில் கைது : வயநாட்டில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்டவர்

திருவனந்தபுரம்: கேரளாவில் பாரத் தர்ம ஜனசேனா கட்சித் தலைவராக இருப்பவர் துஷார் வெள்ளாப்பள்ளி. இவர், கடந்த மக்களவை தேர்தலில், வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். கடந்த 10 வருடங்களுக்கு முன் இவர் ஐக்கிய அரபு குடியரசு நாடான அஜ்மானில் கட்டிட நிறுவனம் நடத்தி வந்தார். இவரது நிறுவனத்தின் கீழ் திருச்சூரை சேர்ந்த நாசில் அப்துல்லா என்பவர் கான்டிராக்டராக இருந்து வந்தார். இந்நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடந்த 2009ல் துஷார் வெள்ளாப்பள்ளி தனது நிறுவனத்தை மூடினார். அப்போது நாசில் அப்துல்லாவுக்கு கொடுக்க வேண்டிய 19 கோடிக்கு அவர் செக் கொடுத்தார். ஆனால் வங்கியில் பணம் இல்லாததால் செக் திரும்பி விட்டது. இது தொடர்பாக நாசில் அப்துல்லாவுக்கும், துஷார் வெள்ளாப்பள்ளிக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. இதற்கிடையே செக் மோசடி தொடர்பாக நாசில் அப்துல்லா அஜ்மான் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். இந்த விவரம் துஷார் வெள்ளாப்பள்ளிக்கு தெரியாது.இந்நிலையில் சுமூக தீர்வு ஏற்படுத்துவதாக கூறி கடந்த சில தினங்களுக்கு முன் துஷார் வெள்ளாப்பள்ளியை நாசில் அப்துல்லா, அஜ்மானுக்கு வரவழைத்தார். இதை நம்பி துஷார் வெள்ளாப்பள்ளி கடந்த 20ம் தேதி அஜ்மானுக்கு புறப்பட்டு சென்றார். அஜ்மானை விமானநிலையத்தில் வைத்து போலீசார் அதிரடியாக அவரை கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் அஜ்மான் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த விவரம் மறுநாள் (21ம் தேதி) தான் துஷார் வெள்ளாப்பள்ளியின் உறவினர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துஷார் வெள்ளாப்பள்ளியின் தந்தையும், ஈழவ அமைப்பான எஸ்.என்.டி.பி.யின் தலைவருமான வெள்ளாப்பள்ளி நடேசன் கேரள முதல்வர் பினராய் விஜயனிடம் கோரிக்கை விடுத்தார். கேரள பா.ஜ. தலைவர்களும் அவரை மீட்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதையடுத்து துஷார் வெள்ளாப்பள்ளியை மீட்க நடவடிக்கை எடுக்க கோரி பினராய் விஜயன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார்.இதற்கிடையே ஐக்கிய அரபு குடியரசு நாட்டிலுள்ள கேரளாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான யூசுப் அலி அஜ்மான் நாட்டு அதிகாரிகளை தொடர்பு கொண்டு 1 லட்சம் திர்ஹம் ஜாமீன் தொகை கட்டியதை தொடர்ந்து நேற்று துஷார் வெள்ளாப்பள்ளிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. துஷார் வெள்ளாப்பள்ளியை சதித்திட்டம் தீட்டி அஜ்மானுக்கு வரவழைத்து கைது செய்யப்பட்டதாக கேரள பா.ஜ. தலைவர் தரன் பிள்ளை குற்றம்சாட்டியுள்ளார்.             

மூலக்கதை