காஷ்மீர் விவகாரத்தை இந்தியாவும் பாகிஸ்தானும் பேசி தீர்க்க வேண்டும்...இதில் மூன்றாவது நாடு தலையிட கூடாது: பிரான்ஸ் அதிபர்

தினகரன்  தினகரன்
காஷ்மீர் விவகாரத்தை இந்தியாவும் பாகிஸ்தானும் பேசி தீர்க்க வேண்டும்...இதில் மூன்றாவது நாடு தலையிட கூடாது: பிரான்ஸ் அதிபர்

பாரீஸ்: காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாடு தலையிட கூடாது என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், மற்றும் பக்ரைன் ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக நேற்று பிரான்ஸ் சென்றடைந்த அவரை தலைநகர் பாரீசில் அந்த நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வரவேற்றார். பாரீஸ் அருகே உள்ள சாண்டிலி அரண்மனையின் தனி அறையில் இருநாட்டு உறவு, டிஜிட்டல், சைபர் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தனர். சுமார் 90 நிமிடங்கள் இந்த பேச்சுவார்த்தை நடந்தது. பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரான்ஸ் அதிபர் மேக்ரான், காஷ்மீர் பிரச்சனையை இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும். இதில் மூன்றாவது நாடு தலையிடவோ, வன்முறையை தூண்டவோ கூடாது. அந்த பிராந்தியத்தில் அமைதியான சூழலை ஏற்படுத்த வேண்டும். மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இன்னும் சில தினங்களில் பாகிஸ்தான் பிரதமரிடமும் பேச உள்ளேன். அப்போது காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக இரு தரப்பு மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவேன். இந்தியாவுக்கு வழங்கப்படும் 36 ரபேல் போர் விமானங்களில் முதல் விமானம் அடுத்த மாதம் டெலிவரி செய்யப்படும், என்று கூறியுள்ளார். முன்னதாக காஷ்மீர் விவகாரத்தில் சமரசம் செய்ய தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்த நிலையில், தற்போது பிரான்ஸ் அதிபர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மூன்றாம் நாடு தலையீடு இருக்கவேகூடாது என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை