ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு...நீதிமன்றம் அளித்துள்ள வாரண்ட் அடிப்படையில் ப.சிதம்பரம் கைது: சிபிஐ அறிவிப்பு

தினகரன்  தினகரன்
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு...நீதிமன்றம் அளித்துள்ள வாரண்ட் அடிப்படையில் ப.சிதம்பரம் கைது: சிபிஐ அறிவிப்பு

டெல்லி: ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை டெல்லியில் உள்ள இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நீதிமன்றம் அளித்துள்ள வாரண்ட் அடிப்படையில் ப.சிதம்பரத்தை கைது செய்துள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் நாளை ஆஜர்படுத்தப்போவதாக சிபிஐ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தற்போது ப.சிதம்பரத்தை டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். சிபிஐ அலுவலகத்தில் வைத்து ப.சிதம்பரத்திடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  அவரது இல்லத்தில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு, இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்விடம் ப.சிதம்பரம் சார்பில் முறையிடப்பட்டது. இந்நிலையில் அயோத்தி வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உடனடியாக விசாரிக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்தது. இதனிடையே ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மறுக்கப்பட்டதை அடுத்து டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் விரைந்தனர். இந்நிலையில் ப.சிதம்பரம் விவகாரம் குறித்தும் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை நடவடிக்கைகள் குறித்தும் இன்று காங். மூத்த தலைவர்களான கபில்சிபல், அபிஷேக் சிங்வி, சல்மான் குர்ஷித், உள்ளிட்டோருடன் ப.சிதம்பரமும் டெல்லியில் உள்ள காங். கட்சி தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். பின்னர் அவர் பத்திரிகையாளர்களின் சந்திப்பை முடித்து விட்டு,  டெல்லியில் உள்ள தனது வீட்டிற்கு  சென்ற போது காரை பின் தொடர்ந்து வந்த அதிகாரிகள் அவரது வீட்டின் கதவு திறக்கப்படாததால் சுவர் ஏறி குதித்தனர். அதனை அடுத்து நீண்ட நேர பெரும் பரபரப்புக்கு பிறகு ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ப.சிதம்பரத்தை மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்த பிறகு சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை