பல கோடி ரூபாய் ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் அதிரடி கைது

தினகரன்  தினகரன்
பல கோடி ரூபாய் ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் அதிரடி கைது

* 27 மணி நேரத்துக்கு பின் காங். அலுவலகத்தில் பேட்டி அளித்தார்* வீடு திரும்பியபின் இரவு 9.45க்கு சிபிஐ அதிகாரிகள் சுற்றிவளைப்பு* தலைமை இயக்குனர் அலுவலகத்தில் விடிய விடிய விசாரணைபுதுடெல்லி: பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்ட நிலையில் மாயமான முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ நேற்றிரவு அதிரடியாக கைது செய்தது. 27 மணி நேர தலைமறைவுக்குப் பிறகு காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பேட்டி அளித்து விட்டு வீடு திரும்பியதும், சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து அவரை சுற்றிவளைத்து காரில் ஏற்றிச் சென்றனர். அவரிடம். சிபிஐ தலைமை அலுவலகத்தில் விடிய விடிய தீவிர விசாரணை நடத்தப்பட்டது. நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்படுகிறார். காங்கிரஸ் மூத்த  தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம், கடந்த 2007ம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக  இருந்தபோது ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்காக அந்நிய  முதலீட்டு  மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் பெற்றுத் தருவதாக கூறி  சட்ட விரோதமாக கோடிக்கணக்கில் பணம் பெற்றதாக  குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. இந்த முறைகேட்டில் அவரது மகன்  கார்த்தி சிதம்பரம் கோடிக்கணக்கில் லஞ்சமாக பெற்றதாகவும்  தெரிவிக்கப்பட்டது. இது குறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இதே  விவகாரத்தில் சட்ட விரோத பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் மத்திய  அமலாக்கப் பிரிவு அதிகாரிகளும் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது  வழக்குப் பதிவு செய்தனர். ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு விசாரணை டெல்லி பாட்டியாலா சிபிஐ  நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தபோது, இந்த வழக்கு தொடர்பாக  ப.சிதம்பரத்தை  கைது செய்து விசாரிக்க அனுமதிக்கும்படி  சிபிஐ தரப்பில் அனுமதி கோரப்பட்டது. இதே கோரிக்கையை அமலாக்கத் துறையும் முன்வைத்தது. இதனால், கைது செய்யப்படலாம் என அச்சமடைந்த சிதம்பரம், முன்ஜாமீன் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்தார். ஆனால், நீண்ட விசாரணைக்கு பின்னர் அவரது கோரிக்கையை நேற்று  முன்தினம் நிராகரித்த உயர் நீதிமன்றம், ஜாமீன் வழங்க முடியாது என  அறிவித்தது. இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக  ப.சிதம்பரம் தரப்பில் அடுத்த சில மணி நேரத்தில் உச்ச நீதிமன்றத்தில்  மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டு, அதை அவசர வழக்காக விசாரிக்க  வேண்டும் என கோரப்பட்டது. ஆனால், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இந்த கோரிக்கையை நிராகரித்தார். இதனால், ப.சிதம்பரம் எந்த நேரத்திலும்  கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதுமே, நேற்று முன்தினம் மாலையே டெல்லியில் உள்ள  சிதம்பரத்தின் வீட்டை சிபிஐ, அமலாக்கத் துறை அதிகாரிகள் நள்ளிரவு வரை  முற்றுகையிட்டனர். ஆனால், ப.சிதம்பரம் வீட்டில் இல்லை. அவர் தலைமறைவாகி  விட்டார். நேற்று காலையும் அவருடைய வீட்டுக்கு சிபிஐ  அதிகாரிகள் சென்றனர். அவர் வெளிநாடு தப்பி விடாமல் இருக்க லுக் அவுட் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், ப.சிதம்பரம் தரப்பில் முன்ஜாமீன் கோரிய வழக்கை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் முறையிடப்பட்டது. இதனால், காலை முதல் மாலை வரை நீதிமன்றத்தில் பரபaரப்பு ஏற்பட்டது. இறுதியில் இவ்வழக்கை நாளை விசாரிப்பதாக உச்ச நீதிமன்ற பதிவேட்டில் குறிப்பிடப்பட்டது. அதேசமயம், சிதம்பரம் எங்கிருக்கிறார் என்பது மர்மமாகவே இருந்து வந்தது. அவர் தலைமறைவானது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.இதைத் தொடர்ந்து, யாரும் எதிர்பாராத வகையில் தலைமறைவாகி 27 மணி நேரத்திற்குப் பிறகு, நேற்று இரவு 8.11 மணி அளவில் அவர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் திடீரென வந்தார். அங்கு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ‘‘ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் நான் எந்த குற்றமும் செய்யவில்லை. தலைமறைவாகவும் இல்லை,’’ என்றார். சிதம்பரம் கட்சி அலுவலகத்திற்கு வந்ததால் மீண்டும் பரபரப்பு தொற்றியது. அவர் பேட்டி அளித்துக் கொண்டிருக்கும் போதே, சிபிஐ அதிகாரிகள் காங்கிரஸ் அலுவலகத்திற்கு விரைந்தனர். பேட்டியை முடித்துக் கொண்ட சிதம்பரம், அங்கிருந்து புறப்பட்டு தனது வீட்டுக்கு காரில் சென்றார். அவரை பின்தொடர்ந்து சிபிஐ அதிகாரிகளும் விரைந்தனர். சுமார் 9 மணி அளவில் சிதம்பரம் வீட்டை அதிகாரிகள் சென்றடைந்த போது, அங்கு கேட்கள் பூட்டப்பட்டு கிடந்தன. இதனால், சுவர் ஏறி குதித்தும், பின்வாசல் வழியாகவும் சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் 20 பேர் கொண்ட குழுவினர் அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்தனர். அதே சமயம் அங்கு காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், போலீசார் குவிக்கப்பட்டனர். அதிலிருந்தே சிதம்பரத்தின் வீட்டில் பதற்றமான சூழல் நிலவியது.சுமார் ஒன்றரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, இரவு 9.45 மணி அளவில் சிபிஐ அதிகாரிகள், சிதம்பரத்தை கைது செய்தனர். அவரை காரில் ஏற்றி வெளியில் அழைத்துச் செல்ல முயன்றபோது, அங்கு கூடியிருந்த தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். பின்னர் சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிதம்பரத்திடம், அங்கு சிபிஐ தலைமை இயக்குநர் விடிய விடிய தீவிர விசாரணை நடத்தினார். இன்று காலை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.  இந்த கைது படலத்தால் டெல்லி நகரமே நேற்று காலை முதல் இரவு வரை மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. மேலும், சிதம்பரம் கைது விவகாரம் அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ளது.இதுவரை...ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில் ஏற்கனவே, சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளார். இதேபோல், இந்த வழக்கில், ஐஎன்எக்ஸ் உரிமையாளர்கள் இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி கைது செய்யப்பட்டனர். பின்னர் இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாறிவிட்டார்.கைதான முதல் நிதி அமைச்சர்இதுவரை இருந்த மத்திய நிதி அமைச்சர்கள் யாரும் ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டதில்லை. முதல் முறையாக, ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் உள்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.

மூலக்கதை