அந்நிய நேரடி முதலீடு விதிமுறை மீறல் பிரனாய் ராய் மீது சிபிஐ வழக்கு பதிவு

தினகரன்  தினகரன்
அந்நிய நேரடி முதலீடு விதிமுறை மீறல் பிரனாய் ராய் மீது சிபிஐ வழக்கு பதிவு

புதுடெல்லி: அந்நிய நேரடி முதலீட்டு விதிமுறையை மீறியதாக என்டிடிவி நிறுவனர்கள் பிரனாய் ராய், ராதிகா ராய் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. பிரபல என்டிடிவி நிறுவனத்துடன் லண்டனை சேர்ந்த என்என்பிஎல்சி என்ற எலெக்ட்ரிக் நிறுவனம், கடந்த 2006ம் ஆண்டு நவம்பர் 30ல் இணைக்கப்பட்டது. இதையடுத்து, என்என்பிஎல்சி நிறுவனம் கடந்த 2009ம் ஆண்டு அந்நிய நேரடி முதலீடு மேம்பாட்டு வாரியத்திடம் பெற்ற அந்திய நேரடி முதலீட்டு அனுமதியை மீறி, பல கோடி ரூபாயை என்டிடிவியின் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணையை கடந்த 2016ல் சிபிஐ நடத்தியது. அப்போது, தனது முதல் தகவல் அறிக்கையில், கடந்த 2004 முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலத்தில் என்டிடிவி உலகம் முழுவதும் 32 துணை நிறுவனங்களை ஏற்படுத்தின. வரி ஏய்ப்பு வாய்ப்புள்ள ஹாலந்து, பிரிட்டன், துபாய், மலேசியா மற்றும் மொரிசியஸ் உள்ளிட்ட நாடுகளில் போலியான நிறுவனங்களை தொடங்கி, வெளிநாடுகளில் இருந்து நிதியை பெற்றுள்ளது. அடையாளம் தெரியாத அரசு ஊழியர்கள், என்டிடிவி.யின் இந்த மோசடிக்கு உதவி செய்துள்ளனர்,’ என்று கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரனாய் ராய், ராதிகா ராய் மற்றும் என்டிடிவி.யின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) விக்ரமாதித்தியா சந்திரா மற்றும் அடையாளம் தெரியாத அரசு ஊழியர்கள் மீது கிரிமினல் சதி, ஊழல் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.  இதையடுத்து, சிபிஐ நேற்று விக்ரமாதித்தியா சந்திராவின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தியது. இதைத் தொடர்ந்து, என்டிடிவி செய்தி நிறுவனத்தின் வர்த்தகத்தில் பல நூறு கோடி ரூபாய் முதலீட்டை என்என்பிஎல்சி நிறுவனம் முறைகேடாக செய்ததாகவும், அந்நிய நேரடி முதலீட்டு விதிகளை மீறியதாகவும் பிரனாய் ராய், ராதிகா ராய், விக்ரமாதித்தியா உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. ஆனால், சிபிஐ.யின் இந்த குற்றச்சாட்டை என்டிடிவி நிறுவனம் மறுத்துள்ளது.

மூலக்கதை