கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறப்பு

சென்னை: காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ம் தேதி முதல் மே 31ம் தேதி தவணை காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தவணை காலத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி 177 டிஎம்சி தமிழகத்திற்கு கர்நாடகா அரசு தர வேண்டும்.

இந்த நிலையில் கடந்த ஜூன் 1ம் தேதி இந்தாண்டுக்கான தவணைகாலம் தொடங்கியது. இந்த தவணை காலத்தில் ஒப்பந்தப்படி ஜூனில் 9. 19 டிஎம்சி நீர் தர வேண்டும்.

ஆனால், 2. 06 டிஎம்சி மட்டுமே கர்நாடகா தந்தது. இதையடுத்து காவிரி ஆணையம், ஒப்பந்தப்படி கர்நாடகா தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனாலும் கடந்த ஜூலை மாதத்தில் 31. 24 டிஎம்சியில் 7. 94 டிஎம்சி மட்டுமே தந்தது.

இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடந்த சில நாட்களாக கர்நாடகா மாநிலங்களில் பரவலாக மழை பெய்தது.

இதன் காரணமாக கர்நாடகாவில் உள்ள அணைகளின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்தது. குறிப்பாக, 49 டிஎம்சி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணையில் 100 சதவீதம், 19 டிஎம்சி கொள்ளளவு கொண்ட கபினி அணையில் 99 சதவீதம், 8. 5 டிஎம்சி கொள்ளளவு கொண்ட ஹாரங்கி அணையில் 95 சதவீதம், 37 டிஎம்சி கொள்ளளவு கொண்ட ஹேமாவதி அணையில் 98 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.

இதன் காரணமாக கர்நாடகா அணைகளில் இருந்து உபரி நீர் மேட்டூர் அணைக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக 93 டிஎம்சி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையில் 86 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.

இதற்கிடையே கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 18ம் தேதி வரை 26. 68 டிஎம்சி தர வேண்டும் என்ற நிலையில், 74. 68 டிஎம்சி நீர் கர்நாடகா தமிழகத்திற்கு தந்துள்ளது.

இதன் மூலம் கடந்த 3 மாதங்களில் 67. 11 டிஎம்சியில் 84. 18 டிஎம்சி கொடுத்துள்ளது. குறிப்பாக, கடந்த 3 மாதத்தில் 17. 07 டிஎம்சி நீர் கூடுதலாக தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.

இந்த நிலையில் கர்நாடகா அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால், தமிழகத்திற்கு கூடுதல் நீர் கர்நாடகா இந்த மாதத்தில் திறந்து விடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

.

மூலக்கதை