ஐந்தருவியில் குளிக்க தடை நீக்கம்: சுற்றுலா பயணிகள் குஷி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஐந்தருவியில் குளிக்க தடை நீக்கம்: சுற்றுலா பயணிகள் குஷி

தென்காசி: குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து ஐந்தருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை இன்று விலக்கிக்கொள்ளப்பட்டது. குற்றாலத்தில் இந்தாண்டு ஜூன் மற்றும் ஜூலை மாத சீசன் ஏமாற்றி விட்ட நிலையில் ஆகஸ்ட் துவக்கத்தில் இருந்தே சீசன் நன்றாக உள்ளது.

பெரும்பாலான நாட்கள் இதமான சூழல் மற்றும் சாரல் பெய்து வருகிறது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திடீரென வெயில் அடித்து வந்த நிலையில் நேற்று மதியத்திற்கு பிறகு வெயில் மறைந்து இதமான சூழல் நிலவியது.

மேற்கு தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக இரவு ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஒன்றிரண்டு பிரிவுகள் ஒன்றாக இணைந்து தண்ணீர் சற்று கலங்கலாக விழுந்தது.

இதனால் பாதுகாப்பு கருதி நேற்றிரவு ஐந்தருவியில் மட்டும் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இன்று அதிகாலை வெள்ளப்பெருக்கு கட்டுக்குள் வந்ததையடுத்து தடை விலக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். மெயினருவி, ஐந்தருவி ஆகியவற்றில் தண்ணீர் நன்றாக விழுகிறது.

மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் பரந்து விழுகிறது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது.

பழைய குற்றால அருவி, புலியருவி ஆகியவற்றில் தண்ணீர் சுமாராக விழுகிறது. ஆடி மாதம் நிறைவடைந்ததால் அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுகிறது.

இன்று காலை பெரும்பாலும் வரிசையின்றி குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

மெயின் அருவி ஐந்தருவி ஆகியவற்றில் தண்ணீர் நன்றாக விழுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

.

மூலக்கதை