முதல்வருக்கு எதிராக அவதூறு: வாலிபர் கைது

தமிழ் முரசு  தமிழ் முரசு
முதல்வருக்கு எதிராக அவதூறு: வாலிபர் கைது

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்தாண்டு பலத்த மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வெள்ளப்பாதிப்பால் 30 ஆயிரம் கோடிக்கும் மேல் சேதம் ஏற்பட்டது.

தங்களது மாநிலத்துக்கு உதவும்படி முதல்வர் பினராயி விஜயன் அனைத்து மாநிலங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளிடம் கோரிக்கை விடுத்தார்.

தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானா உட்பட பல மாநிலங்கள் கேரளாவுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் நிதியுதவியை அனுப்பி வைத்தன. ஆனால் இந்த நிவாரண பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்றடையவில்லை என தகவல் பரவியது.

இந்தாண்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யாரும் உதவ வேண்டாம் என பேஸ்-புக், வாட்ஸ்-அப் உட்பட சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் கருத்துக்களை தெரிவித்திருந்தனர். இதையடுத்து கடந்த ஆண்டைப்போல வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் குவியவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த கேரள அரசு கடந்த ஆண்டு கிடைத்த வெள்ள நிவாரண பொருட்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் வழங்கப்பட்டது. எந்த முறைகேடும் நடக்கவில்லை எனவும் விளக்கம் அளித்தது.   சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டார்.

இதையடுத்து அவதூறு பரப்புபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் திருவனந்தபுரம் அருகே நெடுமங்காட்டை சேர்ந்த அப்துல் வாகித்(30) என்பவர் தனது பேஸ்-புக்கில் வெள்ள நிவாரண நிதியை முதல்வருக்கு அனுப்பி வைக்க வேண்டாம் எனவும், எஸ்டிபிஐ கட்சியினரிடம் அளித்தால் அவர்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் நேரடியாக சென்று வழங்குவர் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இதனால்  காட்டாக்கடை போலீசார் அப்துல் வாகித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

.

மூலக்கதை