கிரிக்கெட்டில் ஒரே பாலின திருமணம் அதிகரிப்பு: நியூசிலாந்து வீராங்கனை திடீர் கர்ப்பம்..உற்சாகமாக இருப்பதாக ஜோடிகள் டுவிட்டில் கருத்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
கிரிக்கெட்டில் ஒரே பாலின திருமணம் அதிகரிப்பு: நியூசிலாந்து வீராங்கனை திடீர் கர்ப்பம்..உற்சாகமாக இருப்பதாக ஜோடிகள் டுவிட்டில் கருத்து

வெலிங்டன்:  நியூசிலாந்த் நாட்டில் ஒரே பாலின திருமணம் 2013, ஆகஸ்ட் 19ம் தேதி முதல்  சட்டப்பூர்வமானது. அதனால், அந்நாட்டில் ஒரே பாலின திருமணங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

ஒரே பாலின பெண்கள் திருமணம் செய்து கொண்டு, அவர்கள் குழந்தையும் பெற்றுக் கொள்கின்றனர். எப்படியென்றால், செயற்கை கருவூட்டல் முறையில் மருத்துவமனையை அணுகி கர்ப்பம் தரித்து குழந்தையை பெறுகின்றனர்.


இந்நிலையில், நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனை ஆமி சாட்டர்த் வொயிட், தனது அணியை சேர்ந்த மற்றொரு வீராங்கனையான லியா  தஹுஹு என்பவரை கடந்த மார்ச் 2017ல் ஒரே பாலின திருமணம் செய்து கொண்டார்.   தற்போது ஆமி சாட்டர்த் வொயிட் வெளியிட்ட டுவிட்டில், ‘லியா தஹுஹு கர்ப்பமாக உள்ளார்; புதிய ஆண்டின் தொடக்கத்தில் எங்களது முதல் குழந்தையை நான் எதிர்பார்க்கிறேன். லியாவும், நானும் மகிழ்ச்சியடைகிறோம்.

இந்த புதிய அத்தியாயத்தில் நாங்கள் எவ்வளவு உற்சாகமாக இருக்கிறோம் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது’ என்று கூறியுள்ளார்.

அதற்கு பதிலளித்த லியா தஹுஹு, ‘பின்னர் நாங்கள் 3 பேர்’ என்று கூறி உள்ளார். நியூசிலாந்து அணிக்காக ஆமி சாட்டர்த் வொயிட், 119 ஒருநாள் போட்டிகளிலும், 99 இருபது ஓவர் சர்வதேச போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.

அதேபோல், லியா தஹுஹு 66 ஒருநாள் மற்றும் 50 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

முன்னதாக, நியூசிலாந்து அணியை சேர்ந்த முன்னணி வீராங்கனை ஆல்-ரவுண்டர் ஹாலெ ஜென்சன், ஆஸ்திரேலியாவில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் வீராங்கனை நிகோலா ஹன்கோக்கை ஒரே பாலின திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு, தென்னாப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் டேன் வான் நீகெர்க், தனது அணி வீராங்கனை மரிசேன் காப்பை திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை