காஷ்மீரில் மீண்டும் மூக்கை நுழைக்கும் டிரம்ப்

தினமலர்  தினமலர்
காஷ்மீரில் மீண்டும் மூக்கை நுழைக்கும் டிரம்ப்

வாஷிங்டன்: காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயாராக உள்ளதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் கூறியதாவது: அழகான ஜம்மு காஷ்மீர் மாநிலம், சர்ச்சைக்குரிய இடமாக நீண்ட காலமாக இருந்து வருகிறது. அங்கு ஹிந்துக்களும், முஸ்லிம்களும் உள்ளனர். இருவரும் ஒற்றுமையாக இருப்பார்கள் என சொல்வதற்கு இல்லை. இந்த விவகாரத்தில், என்னால் முடிந்தவரை மத்தியஸ்தம் செய்ய முயற்சி செய்வேன். இந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்டிருக்கும் இரு நாடுகள் கடந்த பல ஆண்டுகளாக நல்ல நட்புறவுடன் இருக்கவில்லை. வெளிப்படையாக சொல்வது என்றால், அங்கு அபாயகரமான நிலையில் தான் உள்ளது.
தேவைப்பட்டால், இரு நாடுகளுக்கு இடையே மத்தியஸ்தம் செய்யவோ அல்லது தன்னால், முடிந்த உதவிகளை செய்யவோ முயற்சி செய்வேன். பிரான்சில் பிரதமர் மோடியை சந்திக்கும் போது முயற்சி செய்வேன். ஆனால், சம்பந்தப்பட்டுள்ள இரு நாடுகளுக்கும் இடையில், அதிக பிரச்னைகள் உள்ளன. இருவருடனும் நாம் நல்ல நட்புறவோடு இருக்கிறோம். ஆனால், அவர்கள் இருவரும் அப்படி இருக்கிறார்கள் என சொல்வதற்கு இல்லை. அந்த பிரச்னைக்கு மதம் முக்கிய காரணம். மதம் மிகவும் சிக்கலான விஷயம். இவ்வாறு அவர் கூறினார்.



கடந்த சில நாட்களுக்கு முன்னர், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்த அதிபர் டிரம்ப், காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய நான் தயார். அது குறித்து , பிரதமர் மோடி கூட என்னிடம் உதவி கேட்டார் என கூறினார். ஆனால் இந்திய அரசு இதனை திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர், இந்தியாவுக்கு எதிராக ஐ.நா.,வில் முறையிட்டது. சீனாவை தவிர எந்த நாடுகளும் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. தொடர்ந்து, பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் டிரம்ப் பேசினார். பின்னர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் தொலைபேசியில் பேசும் போது,ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில், இந்தியாவுக்கு எதிராக, விரோதப் போக்குடன் பேசும் பேச்சுகளை குறைக்க வேண்டும். காஷ்மீரில் அமைதி ஏற்படுத்தும் முயற்சிக்கு இடையூறாக இருக்க வேண்டாம் எனவும் கூறினார்.

மூலக்கதை