குடிமக்கள் பதிவேடு எங்கள் உள்விவகாரம்: ஜெய்சங்கர் உறுதி

தினமலர்  தினமலர்
குடிமக்கள் பதிவேடு எங்கள் உள்விவகாரம்: ஜெய்சங்கர் உறுதி

டாக்கா: ''அசாம் மாநிலத்தில் குடிமக்கள் பட்டியலை தயாரிப்பதும் சட்ட விரோதமாக குடியேறியோரை கண்டறிவதும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்'' என வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறினார்.


இந்தியாவின் அண்டை நாடான வங்க தேசத்திலிருந்து பல ஆண்டுகளாக லட்சக்கணக்கானோர் அசாம், திரிபுரா, மேற்கு வங்க மாநிலங்கள் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவுகின்றனர். அசாம் மாநிலத்தில் 1951ம் ஆண்டிலேயே இந்த பிரச்னையால் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த ஆண்டு ஜூலையில் வரைவு பதிவேடு வெளியிடப்பட்டது. அதில் சேர 3.29 கோடி விண்ணப்பங்கள் வந்தன; 2.9 கோடி பேர் பெயர் தான் சேர்க்கப்பட்டது; 40 லட்சம் பேர் சேர்க்கப்படவில்லை.

அவர்கள் வங்க தேசத்தினர் என்ற சந்தேகத்தில் சேர்க்கப்படவில்லை. சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை அசாமில் வலுத்துள்ளது. இந்தியா - வங்கதேசம் இடையே இது தான் முக்கிய பிரச்னையாக உள்ளது. ஆனால் அதை மத்திய அரசு ஒப்புக் கொள்ளவில்லை. தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்; அதில் பிற நாடுகள் தலையிட முடியாது என்பது இந்தியாவின் வாதம்.


இந்நிலையில் இரண்டு நாள் பயணமாக வங்கதேசம் சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே.அப்துல் மொமெனை சந்தித்து பேசினார். பின் பிரதமர் ஷேக் ஹசீனாவையும் அவர் சந்தித்தார்.

முன்னதாக பத்திரிகையாளர்களிடம் அவர் பேசும் போது ''அசாமில் சட்ட விரோதமாக குடியேறியுள்ளோரை கண்டறியவும் அங்குள்ள மக்களை ஆவணப்படுத்தவும் தான் தேசிய குடிமக்கள் பதிவேடு பராமரிக்கப்படுகிறது. அது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். அதில் பிற நாடுகளுக்கு எந்த வேலையும் இல்லை'' என்றார்.

மூலக்கதை