குறைந்த வட்டியில் சிறப்பு கடன்கள்; எஸ்.பி.ஐ., விழாக்கால சலுகை

தினமலர்  தினமலர்
குறைந்த வட்டியில் சிறப்பு கடன்கள்; எஸ்.பி.ஐ., விழாக்கால சலுகை

சென்னை: ‘விழாக்கால சிறப்பு வாகன கடன், தனிநபர் கடன், வீட்டு கடன் உட்பட பல்வேறு கடன்கள், குறைந்த வட்டியில் வழங்கப்படும்’ என, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது.


இதுகுறித்து, எஸ்.பி.ஐ., வெளியிட்ட அறிவிப்பு விபரம்: விழாக்கால சிறப்பாக, குறைந்த வட்டியில், வாகன கடன், தனிநபர் கடன், வீட்டு கடன், கல்வி கடன் ஆகியவை வழங்கப்படுகிறது.கார் கடன் பெறுபவர்களுக்கு, விழாக்கால கூடுதல் சலுகையாக, செயல்பாட்டு கட்டணம் இன்றி, 8.70 சதவீதம் என்ற, குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. எஸ்.பி.ஐ.,யின் டிஜிட்டல் தளமான, ‘யோனோ’ செயலி வாயிலாக, விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு, 0.25 பைசா வட்டி தள்ளுபடி வழங்கப்படும்.


எஸ்.பி.ஐ.,யில் சம்பள கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், கார் விலையில், 90 சதவீதம் வரை கடன் பெற்று கொள்ளலாம். தனிநபர் கடனாக, 20 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. 10.75 சதவீத வட்டியில், ஆறு ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் வகையில், இந்த கடன் வழங்கப்படுகிறது. மேலும், சம்பள கணக்கு வாடிக்கையாளர்களுக்கு, முன் அனுமதி கடனாக, 5 லட்சம் ரூபாய் வரை, யோனோ வாயிலாக பெற்று கொள்ளலாம்.



இதேபோல, 8.25 சதவீத வட்டியில், இந்தியாவில் பயில, 50 லட்சம் ரூபாய் வரை கல்வி கடன் வழங்கப்படுகிறது. வெளிநாடுகளில் பயில, 1.5 கோடி ரூபாய் வரை, 15 ஆண்டுகளில் திருப்பி செலுத்தும் வகையில் கடன் வழங்கப்படுகிறது. மேலும், வாகன துறையில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாக, வாகன டீலர்கள், கடன்களை குறிப்பிட்ட தேதியில் செலுத்த சிரமப்படுகின்றனர். இதனால், எஸ்.பி.ஐ.,யில் உள்ள 11,500 வாகன டீலர்களுக்காக, 60 நாளில் செலுத்த வேண்டிய தொகையை, 75 நாட்களாகவும், சிலருக்கு, 90 நாட்களாகவும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை