விரோத பேச்சை குறைக்க இம்ரானுக்கு டிரம்ப் குட்டு!

தினமலர்  தினமலர்
விரோத பேச்சை குறைக்க இம்ரானுக்கு டிரம்ப் குட்டு!

வாஷிங்டன்:'ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில், இந்தியாவுக்கு எதிராக, விரோதப் போக்குடன் பேசும் பேச்சுகளை குறைக்க வேண்டும்' என, பாக்., பிரதமர், இம்ரான் கானிடம், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் கண்டிப்புடன் கூறியுள்ளார். மேலும், காஷ்மீரில் அமைதி ஏற்படுத்தும் முயற்சிக்கு இடையூறாக இருக்க வேண்டாம் என்றும், வலியுறுத்தியுள்ளார்.



ஜம்மு - காஷ்மீரில், 370வது சட்டப் பிரிவு நீக்கப்பட்டதற்கு, நம் அண்டை நாடான, பாக்., எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், பிரச்னையை எழுப்பியது. ஆனால், சீனாவைத் தவிர, கவுன்சிலில் உள்ள, மற்ற, 14 நாடுகள் அதற்கு ஆதரவு தரவில்லை.இந்நிலையில்,இந்தியாவுக்கு எதிராகவும், வன்முறையை துாண்டிவிடும் வகையிலும், இம்ரான் கான் தொடர்ந்து கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.

Modi-Trump telephonic conversation



வன்முறை



அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன், சமீபத்தில், இம்ரான் கான் பேசினார். அப்போது, 'இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட முடியாது. இது, இரு தரப்பு பிரச்னை; இந்தியாவுடன் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள்' என, டிரம்ப் கூறியுள்ளார்.இந்நிலையில், டொனால்டு டிரம்புடன், பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம், தொலைபேசியில், அரை மணி நேரம் பேசினார்.

அப்போது, 'பிராந்தியத்தில் அமைதி நிலவுவதை சீர்குலைக்கும் வகையிலும், இந்தியாவில் வன்முறையை துாண்டிவிடும் வகையிலும், பாக்., பிரதமர் இம்ரான் கான் தொடர்ந்து பேசி வருகிறார்' என, பிரதமர் மோடி குறிப்பிட்டார்.அதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம், பாக்., பிரதமர், இம்ரான் கானுடன், தொலைபேசியில், டிரம்ப் பேசினார்.

பிரச்னை



அப்போது, ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில், இந்தியாவுக்கு எதிராக விரோதப் போக்குடன் பேசுவதை குறைத்து கொள்ள வேண்டும்.பிராந்தியத்தில் அமைதி நிலவுவதை உறுதி செய்யும் வகையில், பிரச்னை தீவிரமாவதை இரு தரப்பும் தவிர்க்க வேண்டும் என, இம்ரான் கானிடம், டிரம்ப் கண்டிப்புடன் கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், டிரம்ப் கூறியுள்ள தாவது: என்னுடைய இரண்டு சிறந்த நண்பர்களான, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் பேசினேன். வர்த்தகம், ராணுவ உறவுகள் உள்ளிட்டவை குறித்தும், குறிப்பாக, காஷ்மீரில் பதற்றத்தை குறைப்பதற்கு, இந்தியாவும், பாகிஸ்தானும் செயல்பட வேண்டியது குறித்து பேசினேன். மிகவும் கடினமான சூழ்நிலை தான்; ஆனால், நல்ல பேச்சு நடந்தது.இவ்வாறு, அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு



ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த, அரசியல் சாசனத்தின், 370வது பிரிவு ரத்து; ஜம்மு - காஷ்மீர், லடாக் என யூனியன் பிரதேசங்களாக பிரிப்பு போன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து, பெரும்பாலான பகுதிகளில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. சில இடங்களில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்தக் கட்டுப்பாடுகள், படிப்படியாக விலக்கி கொள்ளப்பட்டு வருகின்றன. ஜம்மு - காஷ்மீரில், நேற்று பொதுவாக அமைதியாக இருந்தது. பெரிய அளவில் எந்த வன்முறையும் இல்லை.மாநிலத்தில் நேற்று நிலவிய சூழ்நிலை:

* ஸ்ரீநகரின் முக்கிய வர்த்தக மையமான, தால் சவுக் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த, சாலை தடுப்புகள் நீக்கப்பட்டன. அப்பகுதியில் வழக்கம் போல போக்குவரத்து இயங்கியது

* ஸ்ரீநகரின் பல்வேறு பகுதிகளில் கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டன

* நேற்று முன்தினத்தைப் போலவே, பள்ளிகள் திறக்கப்பட்டிருந்தாலும், மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது

* அதே நேரத்தில், அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் வருகை அதிகரித்துள்ளது

* சிவில் லைன்ஸ் உள்பட, ஸ்ரீநகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து சீரடைந்துள்ளது. அதே நேரத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன

* கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்ட பகுதிகளில், துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியிலும், சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு பணியிலும் ஈடுபட்டிருந்தனர்

* தால்கேட், போலேவார்ட், சோன்வார் உள்பட பல பகுதிகளில், தனியார் கார்கள் அதிக அளவில் இயங்கின. மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து கார்களும் இயங்கின

* செல்போன் சேவை மற்றும் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில், பெரும்பாலான பகுதிகளில், தொலைபேசி சேவை வழங்கப்பட்டிருந்தது.

ராணுவ வீரர் பலி



ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில், எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள கிராமங்களில், ராணுவ நிலைகளை குறி வைத்து, பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில், நம் ராணுவ வீரர் ஒருவர் பலியானார். நம் ராணுவம் அளித்த பதிலடியை சமாளிக்க முடியாமல், பாக்., ராணுவம் திரும்பியது. இதில் பாக்., தரப்பில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற, தகவல் கிடைக்கவில்லை.

மூலக்கதை