படகு விடலாம் கமிஷனரே!நகரின் நடுவே ஓடுது கழிவு நீர்:மிதக்கும் மக்களை காப்பது யார்?

தினமலர்  தினமலர்
படகு விடலாம் கமிஷனரே!நகரின் நடுவே ஓடுது கழிவு நீர்:மிதக்கும் மக்களை காப்பது யார்?

கோவை:'ஸ்மார்ட் சிட்டி' என, கோவையை பெருமையாக பேசுகின்றனர். ஆனால், 30 நிமிடம் மழை பெய்தாலே, நகரம் ஸ்தம்பித்து விடுகிறது. வாகனங்களில் செல்வோர் திக்குமுக்காடி விடுகின்றனர். ஓரிடத்தை கடந்து செல்ல, ஒரு மணி நேரமாகிறது. நகரின் நடுவே மக்கள் அனுபவிக்கும் இப்பிரச்னைக்கு, மாநகராட்சி நிர்வாகம் தாமதிக்காமல் தீர்வு காண வேண்டும்.
கோவையை 'ஸ்மார்ட் சிட்டி'யாக்குகிறோம் என்ற பெயரில், குளங்கள் மேம்பாடு, எல்.இ.டி., விளக்கு பொருத்துதல், பூங்கா உருவாக்கும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.மழை நீர் வடிந்து செல்வதற்கான முறையான கட்டமைப்பு வசதி, நகர் முழுவதும் இன்னும் முழுமையாக அமைக்கப்படவில்லை. 30 நிமிடம் மழை பெய்தாலே, தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்குகிறது.
நகரில் அரசு மருத்துவமனை, ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள லங்கா கார்னர் சந்திப்பு மிகவும் முக்கியமானது. டவுன்ஹாலில் இருந்து திருச்சி ரோடு மற்றும் ஸ்டேட் பாங்க் ரோட்டுக்கு செல்வோர், லங்கா கார்னரை கடக்க வேண்டும்.அதேபோல், திருச்சி ரோட்டில் வருவோரும், ஸ்டேட் பாங்க் ரோட்டில் இருந்து வருவோரும், லங்கா கார்னர் புதிய பாலம் வழியாக, டவுன்ஹால் நோக்கிச் செல்ல வேண்டும். ஆயிரக்கணக்கான வாகனங்கள் இவ்வழித்தடத்தை பயன்படுத்துகின்றன.மழை பெய்தால், கூட்ஸ் ெஷட் ரோட்டில் இருந்தும், கலெக்டர் அலுவலகத்தில் இருந்தும், திருச்சி ரோட்டில் இருந்தும் வழிந்தோடி வரும் மழை நீர், லங்கா கார்னர் பாலத்துக்கு கீழ் தேங்குகிறது. இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்குவதால், வாகனங்கள் கடந்து செல்ல முடிவதில்லை.கழிவு கடலானது நகரம்நேற்று மதியம், 1:30 முதல், 2:00 மணி வரை கன மழை பெய்தது; பின், 10 நிமிடம் சாரல் மழை பொழிந்தது. இம்மழைக்கே ரோட்டில் ஆறாக தண்ணீர் ஓடி, லங்கா கார்னரில் தேங்கியது. தண்ணீர் 'பம்ப்' செய்வதற்கு, மாநகராட்சி தரப்பில் மோட்டார் வைத்திருந்த போதிலும், அதை இயக்காததால், தண்ணீர் தேங்கியது. டவுன்ஹாலில் இருந்து வந்த வாகனங்கள் புதிய பாலம் வழியாக விடப்பட்டன.டிராபிக் ஜாம்அவ்வாகனங்கள், ஸ்டேட் பாங்க் ரோட்டுக்கு செல்ல, அரசு மருத்துவமனை முன் திரும்ப முயற்சித்தன.
திருச்சி ரோட்டில் வந்த வாகனங்களும் ஸ்டேட் பாங்க் ரோட்டில் செல்ல அணிவகுத்தன. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. அப்பகுதியை கடந்து செல்ல, ஒரு மணி நேரத்துக்கு மேலானது; எரிபொருள் வீணானது.இது மட்டுமல்லாமல், ஒவ்வொரு முறை மழை பெய்யும்போதும், அவிநாசி ரோடு பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்கினால், மேம்பாலத்தில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
சோமசுந்தரா மில் ரோடு பாலத்துக்கு கீழ் தண்ணீர் தேங்கினால், காட்டூர் பகுதியில் நெருக்கடி ஏற்படுகிறது.இப்படி மக்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு, முதலில் தீர்வு கண்டு விட்டு, அப்புறம் நகரை ஜோடிக்கும் திட்டங்களில் கவனம் செலுத்தலாம் என்று, நேற்று புலம்பியபடி சென்றனர் ஜனங்கள்.குறைந்தபட்சம் படகு சவாரியாவது துவங்க, மாநகராட்சி கமிஷனர் முன்வர வேண்டும்!

மூலக்கதை