மக்களை வாட்டும் ஈக்கள்! குப்பை கிடங்கில் பல்கிப்பெருவதால் அவதி

தினமலர்  தினமலர்
மக்களை வாட்டும் ஈக்கள்! குப்பை கிடங்கில் பல்கிப்பெருவதால் அவதி

திருப்பூர்:திருப்பூர், வெள்ளியங்காடு குப்பை கிடங்கில் உற்பத்தியாகும் ஈக்கள் சுற்றுப்பகுதி மக்களுக்கு பெரும் தொல்லையாக உள்ளது. உணவு, குடிநீர் கூட பாதுகாக்க வழியின்றி மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.திருப்பூர் மாநகராட்சி, 52 வது வார்டுக்கு உட்பட்டது வெள்ளியங்காடு. இப்பகுதியில் பயன்பாட்டில் இல்லாத ஒரு பெரிய பாறைக்குழியில், மாநகராட்சி நிர்வாகம் குப்பை கழிவுகளை கொண்டு கொட்டி வருகிறது.
பாறைக்குழி முற்றிலும் நிரம்பிய நிலையிலும், குப்பை கொட்டப்படுகிறது.அதனை சுற்றிலும், சுற்றுச்சுவர் உள்ள நிலையிலும், பல பகுதியிலிருந்தும் கொண்டு வந்து சேர்க்கப்படும் கழிவுகளிலிருந்து கடுமையான துர்நாற்றம் கிளம்புகிறது. இதுதவிர கழிவுகளை உணவாக்கும் வரும் ஈக்கள், கொசுக்கள் மிக அதிகளவில் இங்கு காணப்படுகிறது. பாறைக்குழியை ஒட்டி அமைந்துள்ள சீனிவாச நகரில் நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. குப்பைக்கழிவிலிருந்து உற்பத்தியான ஈக்கள் இந்த வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளன. வீதி முழுவதும் இந்த ஈக்கள் எந்த நேரமும் பறந்த வண்ணம் உள்ளன.
வீடு,வாசல், மாடி, ஒயர்கள், மரம், செடி, பாத்திரங்கள் என ஈக்கள் இல்லாத இடமே இல்லை என்ற அளவில் அவை பெருகி கிடக்கின்றன. மாலை நேரம் அதே போல் கொசுக்களும் படையெடுத்து மக்களை வாட்டி வதைக்கின்றன. வீட்டில் உள்ள பாத்திரங்களில் உணவு, குடிநீர் என எதையும் பாதுகாக்க முடியாத நிலை காணப்படுகிறது.
கடும் துர்நாற்றமும் வீசுவதால் பெரும் அவதி ஏற்படுகிறது.மாநகராட்சி ஊழியர் தினமும் காலை நேரம் ஒரு முறை ஈக்களை அழிக்க மருந்து அடித்து செல்கின்றனர். ஆனால், அடுத்த அரை மணிக்குள் மீண்டும் பல மடங்கு ஈக்கள் வந்து விடுகின்றன. செத்து விழும் ஈக்களை வீடு, வாசலில் பெருக்கி அள்ளி சுத்தம் செய்வதை வழக்கமாக செய்யும் நிலை உள்ளது.அப்பகுதியினர் கூறுகையில், 'ஈக்களை அழிக்க தொடர்ந்து மருந்துகளை தெளித்து வருகிறோம். இருந்தாலும், அவற்றை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், மன நிம்மதியும் இழந்து, சுகாதாரம் கெட்டு, நோய் தாக்குதலும் ஏற்படுகிறது.
பறந்து செல்லும் ஈக்களும், ரோடு முழுவதும் செத்து விழுந்து கிடக்கும் ஈக்களும் எங்கள் நகரின் அடையாளமாகவே மாறி விட்டது. எனவே, இதற்கு நிரந்தர தீர்வு காண குப்பைகளை முற்றிலும் மூடி ஈக்கள், கொசு உற்பத்தியாகாத வகையில் மண் போட்டு மூட வேண்டும்,' என கவலை தெரிவித்தனர்.
'விரைவில் தீர்வு காணப்படும்'வெள்ளியங்காட்டில் ஏற்பட்டுள்ள ஈக்கள் பிரச்னை குறித்து, மாநகர் சுகாதார அலுவலர் பூபதி கூறியதாவது:அப்பகுதியில், ஈக்களை கட்டுப்படுத்த 'டைக்குளோராவாஷ்' எனும் வீரியம் மிக்க மருந்து தெளிக்கப்படும். குப்பை கழிவுகளை பொருத்தவரை மாநகராட்சி பகுதிகளில் இதன் மூலம் உரம் உற்பத்தி செய்யும் வகையில் மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. வெள்ளியங்காடு பகுதியில் அதிகபட்சமாக ஒரு மாத காலத்துக்குள் குப்பை கொட்டுவது நிறுத்தப்படும். உர உற்பத்தி மையங்கள் செயல்படத்துவங்கியதும் குப்பை அங்கு கொண்டு செல்லப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை