'பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் இரண்டாவது இடம்'

தினமலர்  தினமலர்
பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் இரண்டாவது இடம்

சென்னை, -''நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், இரண்டாவது இடத்தில், தமிழகம் உள்ளது,'' என, தொழில் துறை அமைச்சர், எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

தொழில் சார்ந்த துறைகளில், தமிழகத்தை முன்மாதிரி மாநிலமாக மாற்றுதல் குறித்து, தொழில் துறை அதிகாரிகளுக்கான, இரண்டு நாள் பயிலரங்கம், சென்னை, சிறுசேரி தகவல் தொழில்நுட்ப பூங்காவில், துவங்கியது.அமைச்சர், எம்.சி.சம்பத் பேசியதாவது:
தமிழகம், தொழில் சார்ந்த உதிரிபாகங்கள் உற்பத்தி செய்வதில், தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. தொழில் துறையில் முன்னேறிய மற்றும் தொழில் துவங்க உகந்த மாநிலமாகவும், தமிழகம் உள்ளது.சட்டம் - ஒழுங்கு பிரச்னை இல்லாத, சாலை, ரயில், கப்பல் போக்குவரத்து வசதி உடைய மாநிலமாகவும் உள்ளது.மேலும், 37 ஆயிரத்து, 720 தொழிற்சாலைகளுடன், எண்ணிக்கையில், இந்திய அளவில், முதல் இடத்தில் உள்ளோம்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், மகாராஷ்டிராவுக்கு அடுத்து, இரண்டாவது இடத்தில் உள்ளோம்.போட்டி உலகில், தமிழகம் முன்னேறி வருகிறது. 5,000 ஏக்கர் பரப்பளவில், புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கவும், புதிய விமான நிலையம் அமைக்கவும், இடம் பார்த்து வருகிறோம்.இவ்வாறு, அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், தொழில் துறை செயலர், என்.முருகானந்தம், தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவன தலைவர், ரமேஷ்சந்த் மீனா, தொழில் வளர்ச்சி நிறுவன இயக்குனர், ஜெ.குமரகுருபரன் உட்பட, பலர் பங்கேற்றனர்.

மூலக்கதை