அமெரிக்கா ஏவுகணை சோதனை: ரஷ்யாவுக்கு எச்சரிக்கை?

தினமலர்  தினமலர்

வாஷிங்டன், அணு ஆயுத போரை தவிர்க்கும் வகையில் ரஷ்யாவுடன் அமெரிக்கா மேற்கொண்டிருந்த ஏவுகணை சோதனை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியுள்ள நிலையில் நடுத்தர ரக ஏவுகணை சோதனையை அந்நாடு நிகழ்த்தியுள்ளது. இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.உலகின் இரு பெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்காவும் ரஷ்யாவும் சில ஆண்டுகளுக்கு முன் வரை பனிப்போர் எனப்படும் போருக்கான ஆயத்தமாக ஆயுதங்களை குவித்து வந்தன. அணு ஆயுத நாடுகளான இரண்டும் நீண்ட துார ஏவுகணைகளை ஏராளமாக கைவசம் வைத்திருந்தன. இதனால் உலக நாடுகள் மத்தியில் அமைதியற்ற நிலை காணப்பட்டது.அதை தவிர்க்கும் வகையில் ௧௯௮௭ல் அமெரிக்காவும் ரஷ்யாவும் ஐ.என்.எப். ஒப்பந்தம் எனப்படும் ௩௦௦௦ - ௫௫௦௦ கி.மீ. பாயும் ஏவுகணைகள் தயாரிப்பு மற்றும் சோதனை தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தன.இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இம்மாதம் ௨ம் தேதி அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக தானாக அறிவித்தார். இதனால் ரஷ்யா அதிர்ச்சி அடைந்தது. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு பாதிக்கப்படக் கூடும் என அச்சம் தெரிவித்தது. ஆனால் 'ஒப்பந்தத்தை ரஷ்யா பல முறை மீறியுள்ளது' என அமெரிக்கா கூறியது.

இந்நிலையில் ரஷ்யாவுக்கு மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் நடுத்தர ரக ஏவுகணையை கடந்த ஞாயிறு அன்று ஏவி அமெரிக்கா சோதனை நடத்தியுள்ளது. அந்நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் நிகோலஸ் தீவில் 'டொமஹாக்' ரக ஏவுகணை ௫௦௦ கி.மீ. பறந்து சென்று குறிப்பிட்ட இலக்கை தாக்கி அழித்தது.இதுபோன்ற சோதனைகளை ௩௨ ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கா நிறுத்தி இருந்த நிலையில் தற்போது மீண்டும் நடத்தியுள்ளது. விரைவில் ஆசியா கண்டத்தில் உள்ள சீனா உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் வகையில் அந்தப்பகுதியில் நடுத்தர ரக ஏவுகணைகளை அமைக்க உள்ளதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

'பதிலுக்கு பதில் செய்ய மாட்டோம்'ரஷ்யா பெருந்தன்மையாக அறிவிப்புஅமெரிக்காவின் செயலுக்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்நாட்டின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் செர்கி ரியாப்கோவ் ''அமெரிக்காவின் செயல் போர் பதற்றத்தை ஏற்படுத்தும்; நாடுகளுக்கு இடையே ஆயுத குவியலை ஊக்குவிக்கும். எனினும் நாங்கள் பதிலுக்கு பதில் செயலில் இறங்க மாட்டோம்'' என்றார்.அமெரிக்கா அணு ஆயுத சோதனை நடத்திய தகவல் வெளியாகும் முன் பிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் 'ஐ.என்.எப். ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா தானாகவே விலகிக் கொண்டது. அந்நாடு போல நாங்களும் நீண்ட துார நடுத்தர துார ஏவுகணைகளை சோதனையிடவோ அவற்றை பிற பகுதிகளில் அமைக்கவோ விரும்பவில்லை'' என்றார்.

மூலக்கதை