'நெட்பிளிக்ஸ்' தொடரால் மன உளைச்சலுக்கு ஆளான இந்தியர்

தினமலர்  தினமலர்

துபாய், துபாயில் பணியாற்றும் கேரளாவை சேர்ந்த இளைஞரின் அலைபேசி எண் சேக்ரட் கேம்ஸ் எனும் இணைய தொடரில் தவறுதலாக வெளியானதை அடுத்து உலகம் முழுவதிலும் இருந்து அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்து மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.அமெரிக்காவை சேர்ந்த 'நெட்பிளிக்ஸ்' எனும் நிறுவனம் இணையம் வாயிலாக ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களை வெளியிட்டு வருகிறது. மேலும் 'வெப் சீரிஸ்' எனப்படும் இணைய தொடர்களையும் தயாரித்து வெளியிடுகிறது.இவர்கள் சேக்ரட் கேம்ஸ் எனும் இணைய தொடரை தயாரித்தனர். இதில் 'பாலிவுட்' நடிகர்கள் சயீப் அலி கான் ரஜினியுடன் பேட்ட படத்தில் நடித்த நவாசுதின் சித்திக் ஆகியோர் நடித்தனர்.இந்த தொடரின் முதல் பாகம் பெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து இரண்டாவது பாகம் சமீபத்தில் வெளியானது. அதில் வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் வசிக்கும் ஒரு கதாபாத்திரத்தின் அலைபேசி எண் என ஒரு எண் காட்டப்பட்டது.இந்த எண் துபாயில் வசிக்கும் குன்னாப்துல்லா 37; என்ற கேரள இளைஞருக்கு சொந்தமானது. இவர் துபாயில் உள்ள எண்ணெய் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.இவரது அலைபேசி எண் அந்த இணைய தொடரில் தவறுதலாக இடம் பெற்றதை அடுத்து குன்னாப்துல்லாவுக்கு பல்வேறு நாடுகளில் இருந்தும் தொலைபேசி அழைப்பு வரத்துவங்கின.இது குறித்து குன்னாப்துல்லா கூறியதாவது:நான் தினமும் காலை 8:00 மணிக்கு வேலைக்கு சென்றால் இரவு 7:00 மணிக்கு தான் வீடு திரும்புவேன். எனவே இந்த இணைய தொடர்களை பார்ப்பதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை. அப்படியென்றால் என்ன என்று கூட தெரியாது.கடந்த மூன்று நாட்களில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் நுாற்றுக் கணக்கான தொலைபேசி அழைப்புகள் வந்தபடி இருக்கின்றன.இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். எனது எண்ணை திரும்ப ஒப்படைக்க முடிவு செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அறிந்த 'நெட்பிளிக்ஸ்' நிறுவனம் இணைய தொடரில் வெளியான குறிப்பிட்ட எண்ணை மறைத்துவிட்டதாக தெரிவித்தது. குன்னாப்துல்லாவுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு மன்னிப்பும் கோரி உள்ளது.

மூலக்கதை