மலேஷியாவிலிருந்து ஜாகிர் நாயக் வெளியேற்றம்?

தினமலர்  தினமலர்
மலேஷியாவிலிருந்து ஜாகிர் நாயக் வெளியேற்றம்?

கோலாலம்பூர்: மலேஷியாவில், மத பிரசாரம் செய்ய, சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கிற்கு, அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இதனையடுத்து, அவர் மலேஷியாவிலிருந்து வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பையை சேர்ந்தவர் ஜாகிர் நாயக். இஸ்லாமிய மத போதகர். இவர் மீது இந்தியாவில் பல்வேறு நிதி மோசடி வழக்குகள் உள்ளதால் மலேஷியாவில் தஞ்சம் புகுந்து வசித்து வருகிறார். கூட்டம் ஒன்றில் பேசும் போது, இந்தியாவில், வசிக்கும் முஸ்லிம்களை விட மலேஷியாவில் வசிக்கும் ஹிந்துக்களுக்கு 100 மடங்கு அதிக உரிமைகள் உள்ளதாக கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

மலேஷிய பிரதமர் மகாதீர் முகமது கூறும்போது, மதம் குறித்தும் மற்ற சரியான விஷயங்கள் குறித்தும் ஜாகிர் நாயக் பேசுவதை நாங்கள் தடுக்க விரும்பவில்லை. ஆனால், அவரோ மலேஷியாவில் இனவாத அரசியல் பங்கெடுக்க விரும்புகிறார் என்பது தெளிவாக தெரிகிறது. அவருக்கு நிரந்தர தங்கும் உரிமையை கொடுத்தது யார் என்பது எனக்கு தெரியாது.
ஆனால், அத்தகைய உரிமையை பெற்றவர், அரசியல், குறித்து பேச இங்கு அனுமதி இல்லை. ஜாகிர் நாயக் இஸ்லாத்தை போதிக்கலாம். அவர் அதை செய்யவில்லை. மாறாக மலேஷியாவில் உள்ள சீனர்களை சீனாவுக்கும், இந்தியர்களை மீண்டும் இந்தியாவுக்கும் திருப்பி அனுப்புவது குறித்தே பேசினார் என்றார்.



மலேஷிய மனித வளத்துறை அமைச்சர் குலசேகரன் வெளியிட்ட அறிக்கை: மலேஷியாவில் வசிக்கும் ஹிந்துக்கள் நம்பகத்தன்மை குறித்த கருத்துக்காக ஜாகிர் நாயக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர், வெளி நாட்டில் இருந்து வந்தவர். பொருளாதார குற்றங்கள் புரிந்தவர். மலேஷிய வரலாறு குறித்து அவருக்கு தெரியாது. மலேஷியர்களுக்கு இருக்கும் தேசப்பற்றை அவமதிக்கும் வகையில், பேச அவரை அனுமதிக்கக் கூடாது எனக்கூறியிருந்தார்

மலேஷிய உள்துறை அமைச்சர் முஹைதீன் யாசின் கூறுகையில், பொது அமைதியை கெடுக்கும் வகையில், இன ரீதியாக கருத்து தெரிவித்ததற்காகவும், பொய் தகவல்களை பரப்பியதற்காகவும் ஜாகிர் நாயக் மற்றும் சிலரிடம் போலீசார் விசாரணை நடத்துவார்கள். சமூக நல்லிணக்கம் அமைதி ஆகியவற்றிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் யார் மீதும், எனது அமைச்சகத்தின் கீழ் வரும் விசாரணை அமைப்புகள் நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறியிருந்தார்.



இந்நிலையில், மலேஷியாவில் அனைத்து மாகாணங்களிலும் மத பிரசாரம் செய்ய ஜாகிர் நாயக்கிற்கு, மலேஷிய அரசு தடை விதித்துள்ளது. இதனையடுத்து, அவர் மலேஷியாவிலிருந்து வெளியேற்றப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மூலக்கதை