எங்களின் புதிய ஆயுதம் ஆர்ச்சர்...ஜோ ரூட் பெருமிதம்

தினகரன்  தினகரன்
எங்களின் புதிய ஆயுதம் ஆர்ச்சர்...ஜோ ரூட் பெருமிதம்

லண்டன்: இங்கிலாந்து அணி பந்துவீச்சுக்கு புதிய பரிமாணத்தை கொடுக்கும் ஆயுதமாக ஜோப்ரா ஆர்ச்சர் உருவெடுத்திருக்கிறார் என்று கேப்டன் ஜோ ரூட் பாராட்டி உள்ளார். இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளிடையே பாரம்பரியமான  ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. பர்மிங்காமில் நடந்த முதல் டெஸ்டில் 251 ரன் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இந்த  போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 258 ரன்னும், ஆஸ்திரேலியா 250 ரன்னும் எடுத்து ஆல் அவுட்டாகின. 8 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 258 ரன் குவித்து டிக்ளேர்  செய்தது. ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்காமல் 115 ரன் விளாசினார்.இதைத் தொடர்ந்து, 267 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 47.3 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன் எடுத்திருந்தபோது ஆட்டம் டிராவில் முடிந்தது. லாபஸ்ஷேன் 59 ரன், டிராவிஸ் ஹெட் 42* ரன்  எடுத்து அணியை காப்பாற்றினர். இங்கிலாந்து பந்துவீச்சில் ஆர்ச்சர், லீச் தலா 3 விக்கெட் கைப்பற்றினர். ஸ்டோக்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இரு அணிகளுக்கும் தலா 8 புள்ளிகள் கிடைத்தன. இந்த போட்டியில் அறிமுக வேகப்  பந்துவீச்சாளராகக் களமிறங்கிய ஜோப்ரா ஆர்ச்சர் (24 வயது) 2 இன்னிங்சிலும் சேர்த்து 44 ஓவர்கள் பந்துவீசி, 13 மெய்டன் உட்பட 72 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இவரது அதிவேக பவுன்சர் பந்துவீச்சு  ஹெல்மெட்டை பலமாகத் தாக்கியதில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் ‘மூளை அதிர்ச்சி’ காரணமாக விலக நேரிட்டது. அவருக்கு மாற்று வீரராகக் களமிறங்கி பேட் செய்த லாபஸ்ஷேனும் அதேபோல பவுன்சர் பந்தை எதிர்கொண்டு காயம்  அடைந்ததும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. ஆர்ச்சரின் அதிவேக பவுன்சர்களின் அச்சுறுத்தல் பூதாகரமாக உருவெடுத்துள்ள நிலையில், பேட்ஸ்மேன்கள் அணியும் ஹெல்மெட்டில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் தேவை என்று முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த  நிலையில், லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி குறித்து இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கூறியதாவது:  இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக விளையாடினோம். முதல் டெஸ்டில் அடைந்த பின்னடைவில் இருந்து மீண்டு ஆஸ்திரேலியாவுக்கு கடும்  நெருக்கடி கொடுத்தது திருப்தி அளிக்கிறது. அறிமுக வேகம் ஆர்ச்சரின் பந்துவீச்சு பிரமிக்க வைப்பதாக உள்ளது. முதல் போட்டியிலேயே தன் மீதான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்திருக்கிறார். எங்களின் பந்துவீச்சு பலத்துக்கு அவர் புதிய  பரிமாணத்தை கொடுத்துள்ளார். எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் ஆயுதமாக ஆர்ச்சரின் அதிவேக பவுன்சர்கள் விளங்கும் என்பதில் சந்தேகமில்லை.அவரது தனித்துவமான பந்துவீச்சு பாணியும், இயல்பான வேகமும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் ஆர்ச்சரை எதிர்கொள்வது மிகப் பெரிய சவாலாக இருக்கும். இவ்வாறு ரூட் கூறியுள்ளார்.மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ், ஹெடிங்லி மைதானத்தில் நாளை மறுநாள் தொடங்குகிறது.

மூலக்கதை