டிரம்புடன் மோடி பேச்சு

தினமலர்  தினமலர்

புதுடில்லி:அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்புடன், பிரதமர் நரேந்திர மோடி, தொலைபேசியில் பேசினார். அப்போது, பிராந்தியத்தில் அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும், இந்தியாவில் வன்முறையை ஏற்படுத்தும் வகையிலும், பாக்., பிரதமர் இம்ரான் கான் பேசி வருவது குறித்து, அவர் குறிப்பிட்டுள்ளார்.ஜம்மு - காஷ்மீரில், 370வது சட்டப் பிரிவு நீக்கப்பட்டதற்கு, நமது அண்டை நாடான, பாக்., எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், பிரச்னையை எழுப்பியது. ஆனால், அது எடுபடவில்லை. இந்த நிலையில், தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிராகவும், வன்முறையை துாண்டிவிடும் வகையிலும், இம்ரான் கான் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன், சமீபத்தில், இம்ரான் கான் பேசினார். அப்போது,'இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட முடியாது' என, டிரம்ப் கூறியுள்ளார்.இந்நிலையில், டொனால்டு டிரம்புடன், பிரதமர் நரேந்திர மோடி, நேற்று, தொலைபேசியில், அரை மணி நேரம் பேசினார். இது தொடர்பாக, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி:இரு தரப்பு உறவுகள் குறித்து, இரு தலைவர்களும் பேசினர். அதைத் தொடர்ந்து, பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்னைகள் குறித்து பேசினர். குறிப்பாக, பிராந்தியத்தில் அமைதி நிலவுவதை சீர்குலைக்கும் வகையிலும், இந்தியாவில் வன்முறையை துாண்டிவிடும் வகையிலும், பாக்., பிரதமர் இம்ரான் கான் பேசுவது குறித்து, மோடி குறிப்பிட்டார்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை