ஐ.எஸ்., அமைப்பை ஒழிக்க ஆப்கன் அதிபர் சபதம்

தினமலர்  தினமலர்

காபூல்:ஆப்கன் தலைநகர் காபூலில், திருமண விழா ஒன்றில், சனிக்கிழமை இரவு நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில், 93 பேர் உயிரை பறித்தது, பாகிஸ்தானைச் சேர்ந்த, ஐ.எஸ்., பயங்கரவாதி என்பது தெரிய வந்துள்ளது.
இதை அறிந்த, ஆப்கன் அதிபர், அஷ்ரப் கானி, ''பாகிஸ்தானின் எல்லையோர பகுதிகளில், பதுங்கியுள்ள, ஐ.எஸ்., பயங்கரவாதிகளை அழிப்பேன்,'' என, சபதம் செய்துள்ளார்.ஆப்கன் தலைநகர் காபூலில், இரண்டு நாட்களுக்கு முன், திருமண விழா ஒன்றில், மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.இதில், 93 பேர் இறந்தனர்; 200 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு, ஐ.எஸ்., பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.ஆப்கனில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கியுள்ள அமெரிக்க படைகள், அங்கிருந்து வெளியேற முடிவு செய்துள்ளன. அதற்கு முன், அங்கு தேர்தலை நடத்தி, ஆட்சியை பழையபடி, தலிபான்களிடம் ஒப்படைத்து விடுவது என, அமெரிக்கா முடிவு செய்துள்ளது.அதற்காக, கத்தார் நாட்டில் நடந்த பேச்சில், அமெரிக்க பிரதிநிதிகளும், தலிபான்களும் பங்கேற்றனர். ஆப்கன் அரசு மற்றும் அதிபர் அஷ்ரப் கானியின் பிரதிநிதிகள், இதில் பங்கேற்க அழைக்கப்படவில்லை.அமெரிக்காவின் செயலால், அதிருப்தி அடைந்துள்ள அதிபர், அஷ்ரப் கானி, நேரடியாக அமெரிக்காவை எதிர்க்க முடியாமல், வாய் மூடி மவுனம் சாதிக்கிறார்.இந்நிலையில், சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலால் கொதிப்படைந்துள்ள அவர், 'ஐ.எஸ்., பயங்கரவாதிகளை கூண்டோடு ஒழிப்பேன்' என, சபதம் செய்துள்ளார்
.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:காபூலில் திருமண விழாவில் தாக்குதல் நடத்தியது, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின், பாகிஸ்தான் பயங்கரவாதி தான் என்பது உறுதியாகியுள்ளது. பாகிஸ்தானின் மேற்கு பகுதி எல்லையோரங்கள், ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் சொர்க்கபுரியாக திகழ்கின்றன. அமைதியை விரும்பும் பாகிஸ்தான் மக்கள், அங்கு மறைந்துள்ள, ஐ.எஸ்., பயங்கரவாதிகளை கண்டறிய வேண்டும்.ஆப்கானிஸ்தானியர் சிந்திய ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும் பதிலடி கொடுப்பேன். ஐ.எஸ்., பயங்கரவாதிகளை கூண்டோடு அழிப்பேன். அதுபோல, தலிபான்களும், பல ஆண்டுகளாக, பள்ளிகள், கல்லுாரிகள், மசூதிகள், மக்கள் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்தி, ஏராளமானோரை கொன்று குவித்துள்ளனர்; அவர்களையும் ஒழிப்பேன்.இவ்வாறு, அதிபர் அஷ்ரப் கானி தெரிவித்து உள்ளார்.அதே நேரத்தில், அமெரிக்காவை, 'உசுப்பேற்றும்' விதமாக, தலிபான் பயங்கரவாதிகள்வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஆப்கனில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்கா, காபூல் பயங்கரவாத தாக்குதலை தடுத்து நிறுத்த முடியாமல் போய்விட்டது. 'எனவே, ஆப்கனை விட்டு, அமெரிக்கா உடனே வெளியேற வேண்டும்' என, தெரிவித்துள்ளது.

மூலக்கதை