கொஞ்சம் வேலை இருக்கில்ல... 3 நாளாகும் சரணடையறதுக்கு: பீகார் ‘ஆயுத’ எம்எல்ஏ ‘வீடியோ’

தினகரன்  தினகரன்
கொஞ்சம் வேலை இருக்கில்ல... 3 நாளாகும் சரணடையறதுக்கு: பீகார் ‘ஆயுத’ எம்எல்ஏ ‘வீடியோ’

பாட்னா: வீட்டில் ஏகே-47 துப்பாக்கி வைத்திருந்த பீகார் சுயேச்சை எம்எல்ஏ ஆனந்த் சிங், தான் சரணடைவதற்கு இன்னும் 3 அல்லது 4 நாள் ஆகும் என்று வீடியோ தகவல் அனுப்பியுள்ளார். பீகாரைச் சேர்ந்த சுயேச்சை எம்எல்ஏ ஆனந்த் சிங்.  இவர் முன்பு ஐக்கிய ஜனதா கட்சியில் இருந்தபோது முதல்வர் நிதிஷ் குமாருடன் நெருக்கமாக இருந்தார். ஆனால் கடந்த 2015ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன், இவர் ஐக்கிய ஜனதா தள கட்சியிலிருந்து வெளியேறி மொகாமா  தொகுதியில் சுயேச்சையாக போட்யிட்டு வென்றார். ‘சோட்டே சர்க்கார்’ (குட்டி அரசாங்கம்) என அழைக்கப்பட்ட இவர் மீது பல கிரிமினல் வழக்குகள் உள்ளன. பீகார் மொகாமா பகுதியைச் சேர்ந்த கான்ட்ராக்டர் மீதான தாக்குதல் வழக்கில், குரல்  மாதிரியை அளிக்கும்படி ஆனந்த் சிங்குக்கு பீகார் போலீசார் சமீபத்தில் சம்மன் அனுப்பியிருந்தனர். இந்நிலையில் மாதேபுரா மாவட்டம் லத்மா கிராமத்தில் உள்ள இவரது மூதாதையர் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு, ஏகே-47 துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள், 2 கையெறி குண்டுகளை போலீசார் கைப்பற்றினர். பாட்னாவில் உள்ள அவரது அரசு இல்லத்திலும் போலீசார் சோதனை நடத்தி, கத்தி, மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.  இவர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்(உபா) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  இதனால் ஆனந்த் சிங் தலைமறைவானார். இந்நிலையில் அவர் அனுப்பியுள்ள வீடியோ தகவலில், ‘‘நான் கைதுக்கு பயப்படவில்லை. இன்னும்  3 அல்லது 4 நாளில் நீதிமன்றத்தில் நான் சரணடைவேன். முதலில் நான் வீட்டுக்கு சென்று பத்திரிக்கையாளர்களை சந்திப்பேன்’’ என கூறியுள்ளார்.

மூலக்கதை