மகாராஷ்டிராவின் துலே மாவட்டத்தில் கோர விபத்து அரசு பஸ் மீது லாரி மோதி 13 பேர் பரிதாப பலி : 20 பேர் படுகாயம்: 3 பேர் கவலைக்கிடம்

தினகரன்  தினகரன்
மகாராஷ்டிராவின் துலே மாவட்டத்தில் கோர விபத்து அரசு பஸ் மீது லாரி மோதி 13 பேர் பரிதாப பலி : 20 பேர் படுகாயம்: 3 பேர் கவலைக்கிடம்

துலே: மகாராஷ்டிராவின் துலே மாவட்டத்தில், லாரி ஒன்று அரசு பஸ் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியதில் 2 குழந்தைகள், 2 பெண்கள் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மகாராஷ்டிரா அரசு போக்குவரத்துக்கழக பஸ் ஒன்று நேற்று முன்தினம், நந்துர்பார் மாவட்டத்தில் உள்ள ஷஹாதா என்ற நகரில் இருந்து அவுரங்காபாத் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் இரவு 10.30 மணியளவில், துலே மாவட்டத்தின் ஷஹாதா - தோண்டாய்ச்சா சாலையில் உள்ள நீம்குல் என்ற கிராமத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்திசையில் இருந்து லாரி ஒன்று வேகமாக வந்தது. திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடி, எதிரில் வந்த பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் பஸ் அப்பளமாக நொறுங்கியது. லாரியின் முன்பகுதியும் பலத்த சேதமடைந்தது. இந்த கோர விபத்தில் பஸ்சில் இருந்த 2 குழந்தைகள், 2 பெண்கள், பஸ் டிரைவர், லாரி டிரைவர் உட்பட 11 பேர் அந்த இடத்திலேயே பலியானார்கள். மேலும் 22 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 22 பேரை போலீசார் மீட்டு அருகில் உள்ள இரண்டு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர். துலே மாவட்டத்தின் தோண்டாய்ச்சா நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இரண்டு மருத்துவமனைகளிலும் சேர்க்கப்பட்டுள்ள மற்ற 20 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்தவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மூலக்கதை