காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் மத்திய அரசுக்கு எதிராக முன்னாள் அதிகாரிகள் மனு

தினகரன்  தினகரன்
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் மத்திய அரசுக்கு எதிராக முன்னாள் அதிகாரிகள் மனு

புதுடெல்லி:  ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் பாதுகாப்பு படை அதிகாரிகள் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்துள்ளார். மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து ஓய்வு பெற்ற பாதுகாப்பு படை அதிகாரிகள், உயரதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.  பேராசிரியர் ராதாகுமார், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஹந்தல் ஹைதர் தயாப்ஜி,  ஓய்வு பெற்ற விமான படை துணை மார்ஷல் கபில் காக், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அசோக் குமார் மேத்தா, முன்னாள் பஞ்சாப் ஐஏஎஸ் அதிகாரி அமிதாபா பாண்டே மற்றும் முன்னாள் கேரளா ஐஏஎஸ் அதிகாரி கோபால் பிள்ளை  உள்ளிட்டோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். அதில் அவர்கள், ‘காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து செய்து  ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு அரசியலமைப்புக்கு எதிரானது. யூனியன் பிரதேசமாக தரமிறக்கப்பட்டு உள்ளதாலும், அதன் ஒரு பகுதி பிரிக்கப்பட்டு லடாக் யூனியன் பிரதேசமாக  பிரிக்கப்படுவதன் மூலமாக மாநிலமே துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த முழு நடவடிக்கை குறித்தும் எந்த கருத்தையும் தெரிவிக்க மக்களுக்கு வாய்ப்பில்லை. இந்த நடவடிக்கையானது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவுடன் ஒருங்கிணைப்பதை  பாதிக்கிறது,’ என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு முன், இதேபோன்ற 6 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை