கர்நாடகாவில் தொலைபேசி ஒட்டு கேட்பு விவகாரம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவு: முதல்வர் எடியூரப்பா அதிரடி

தினகரன்  தினகரன்
கர்நாடகாவில் தொலைபேசி ஒட்டு கேட்பு விவகாரம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவு: முதல்வர் எடியூரப்பா அதிரடி

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கட்சி தலைவர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் தொலைபேசி  ஒட்டு கேட்பு விவகாரத்தில் புதிய திருப்பம்  ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்படும் என்ற   அதிரடி அறிவிப்பை முதல்வர் எடியூரப்பா வெளியிட்டுள்ளார்.கர்நாடக மாநிலத்தில் மக்களவை  தேர்தலின் போது மண்டியாவில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர்  சுமலதாவின் செல்போன் உரையாடல்கள் ஒட்டு  கேட்கப்பட்டதாக தகவல் வெளியானது. அப்போது அதை யாரும் பெரிய விஷயமாக   எடுத்துக்கொள்ளவில்லை.   இந்நிலையில்  முதல்வராக இருந்த குமாரசாமி,  மஜத எம்எல்ஏ மகனிடம் பாஜ மாநில தலைவர் எடியூரப்பா பேரம் பேசிய  செல்போன் உரையாடல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் அதில், சபாநாயகர் ரமேஷ்குமார்  பாஜவுக்கு ஆதரவாகத்தான் செயல்படுவார். அவரை சரிகட்டிவிட்டோம் என்று அந்த உரையாடல் இடம்பெற்றிருந்தது. இந்த குற்றச்சாட்டை மறுத்த  சபாநாயகராக இருந்த ரமேஷ்குமார் ேபரவையில் அந்த உரையாடலை வெளியிட்டு உரிய  விசாரணை  நடத்த வேண்டும் என்று கூட்டணி அரசை கேட்டுக்கொண்டார். இதையடுத்து  விசாரணைக்கு அப்போது முதல்வராக இருந்த குமாரசாமி உத்தரவிட்டார். அதன்பிறகு ஒட்டு  கேட்பு விவகாரம்  அமைதியானது. இந்நிலையில் மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த  அலோக்குமார், தொலைபேசி ஒட்டு கேட்பு விவகாரத்தில் கூட்டணி ஆட்சிக்கு உதவியதாக கூறப்பட்டது. மேலும், காங்கிரஸ், மஜத, பாஜ எம்எல்ஏக்கள் தொலைபேசி ஒட்டுகேட்கப்பட்டதாக  குமாரசாமி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுபோன்ற சூழ்நிலையில் காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் 17 பேர் ஒட்டு மொத்தமாக  எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த பிறகு முதல்வராக எடியூரப்பா நான்காவது  முறையாக கடந்த ஜூலை  மாதம் 26ம் தேதி பதவியேற்றார். முதல்வர் பதவியேற்ற  பிறகு கூட்டணி ஆட்சியின் போது உயர் பொறுப்பில் இருந்த ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ்  அதிகாரிகள் உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். குறிப்பாக முதல்வர்  குமாரசாமிக்கு  நெருக்கமாக இருந்த அலோக்குமாருக்கு பதில் புதிய போலீஸ்  கமிஷனராக பாஸ்கர் ராவ் நியமிக்கப்பட்டார். இதற்கிடையே டெல்லி  சென்றிருந்த முதல்வர் எடியூரப்பா மேலிட தலைவர்களிடம்  அமைச்சரவை  விரிவாக்கத்திற்கு அனுமதி பெற்றார். அமைச்சரவை விரிவாக்கம் நாளை நடைபெறும்  நிலையில்  பெங்களூருவில் முதல்வர் எடியூரப்பா  நேற்று நிருபர்களுக்கு   பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:அரசியல் கட்சி  தலைவர்கள் மற்றும் அதிகாரிகளின் செல்போன் ஒட்டு கேட்பு விவகாரத்திற்கு  முற்றுப்புள்ளி வைப்பதற்கு நாங்கள் முடிவு செய்தோம்.  மாஜி முதல்வர்  சித்தராமையா உள்ளிட்டோர் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று  வேண்டுகோள்  விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்டு  மாநில அரசின் சார்பில் சிபிஐ விசாரணைக்கு  உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர்கள், எம்ஏல்ஏக்கள்,  போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட யாருடைய போன் அழைப்புகள் பதிவு செய்யப்பட்டன?   யாருடைய போன்கள் ஒட்டு கேட்கப்பட்டன? என்பதை சிபிஐ அதிகாரிகள் முழுமையாக  விசாரணை  நடத்துவார்கள். போன் ஒட்டு கேட்பு தொடர்பான ஆவணங்கள்  மற்றும் ஆதாரங்களை சிபிஐ அதிகாரிகளிடம் வழங்க வேண்டும் என மாநில போலீஸ்  டிஜிபி. நீலமணி ராஜுவுக்கும் உத்தரவிட்டுள்ளேன். இவ்விஷயத்தில் யார் மீது  தவறு  இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை