மோடியின் வாரணாசி தொகுதியில் கங்கா ஆரத்தியை காண நவீன எல்இடி திரைகள்: 11.5 கோடியில் மத்திய அரசு திட்டம்

தினகரன்  தினகரன்
மோடியின் வாரணாசி தொகுதியில் கங்கா ஆரத்தியை காண நவீன எல்இடி திரைகள்: 11.5 கோடியில் மத்திய அரசு திட்டம்

புதுடெல்லி: பிரதமரின் வாரணாசி தொகுதியில் காசி விஸ்வநாதர்  கோயில் பூஜை மற்றும் கங்கா ஆரத்தியை நேரடியாக ஒளிப்பரப்பு செய்யும் வகையில் மிகப்பெரிய எல்இடி திரைகள் அமைப்பதற்கு மத்திய பொதுப்பணித்துறை  திட்டமிட்டுள்ளது.பிரதமர் மோடியின் வாரணாசி மக்களவை தொகுதியில், காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள கங்கையில் நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.  பல்வேறு பெருமைகளை கொண்ட கங்கை நதிக்கு   தினந்தோறும் காலை, மாலையில் நேரடியாக செய்யப்படும் பூஜை, ‘கங்கா ஆரத்தி’ என்று அழைக்கப்படுகிறது.  இந்த பூஜை  கங்கை கரையில் திறந்த வெளியில் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. இதனை காண்பதற்காக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கங்கை நதிக்கரையில் கூடுவது வழக்கம். காசி விஸ்வநாதர் கோயில் பூஜை மற்றும் கங்கா ஆரத்தி நிகழ்ச்சியை நேரடியாக ஒளிப்பரப்பும் வகையில் கோயிலின் அனைத்து நுழைவாயில் பகுதியிலும் மிகப்பெரிய நவீன எல்இடி திரைகள் அமைப்பதற்கு மத்திய பொதுபணித் துறை  திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக 11.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “ தசாஷ்வமேத் வாயில் பகுதியில் கங்கா ஆரத்தி நடைபெறும். தூரத்தில் இருப்பவர்கள் இந்த நிகழ்வை நேரடியாக பார்ப்பதற்கு ஏதுவாக பல இடங்களில் எல்இடி திரைகள் அமைக்கப்படும். பெரும்பாலான  சுற்றுலா பயணிகள் கங்கா ஆரத்தியை பார்ப்பதற்காகதான் வாரணாசி வருகிறார்கள். இதன் மூலம், அவர்கள் பயன் அடைவார்கள்,” என்றனர்.

மூலக்கதை