அடுத்த ஆண்டு இறுதிக்குள் படேல் சிலை அருகே பெரிய உயிரியல் பூங்கா

தினகரன்  தினகரன்
அடுத்த ஆண்டு இறுதிக்குள் படேல் சிலை அருகே பெரிய உயிரியல் பூங்கா

வதோதரா: குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு அருகே அடுத்தாண்டு அக்டோபருக்குள் உலக தரம் வாய்ந்த உயிரியல் பூங்கா அமைக்கப்பட உள்ளது.  குஜராத் மாநிலத்தில் நர்மதா நதிக்கரையோரம் 182 மீட்டர் உயரத்தில் சர்தார் வல்லபாய் படேலின் ஒற்றுமை சிலை கடந்த ஆண்டு நிறுவப்பட்டது. இந்த சிலையை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தை மிக சிறந்த சுற்றுலா  தலமாக மேம்படுத்த வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்தார். இந்நிலையில், இச்சிலைக்கு அருகே உலக தரம் வாய்ந்த பிரமாண்ட உயிரியல் பூங்கா அமைக்கப்பட உள்ளதாக அரசின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது பற்றி சர்தார் சரோவர் நர்மதா நிகாம் நிறுவனத்தின் கூடுதல் தலைமை செயலாளர் ராஜீவ் குப்தா கூறுகையில், “ ஒற்றுமை சிலை அருகே நீர் சாகச விளையாட்டு வசதியை முதல்வர் விஜய் ரூபானி கடந்த சனியன்று தொடங்கி வைத்தார்.  அடுத்த ஆண்டு அக்டோபர் இறுதிக்குள் படேலின் ஒற்றுமை சிலைக்கு அருகே உலக தரம் வாய்ந்த உயிரியல் பூங்கா  அமைக்கப்படும். 1,300 ஏக்கர் பரப்பளவில் 7 நிலைகளில் இந்த உயிரியல் பூங்கா அமைக்கப்படும். இதில் சிங்கம், புலி,  சிறுத்தை, 12 வகையான மான்கள், ஒட்டகம், வரிகுதிரை, காண்டாமிருகம், காட்ெடருமை மற்றும் இதர விலங்குகள் பராமரிக்கப்படும். மத்திய உயிரியல் பூங்கா அதிகாரிகள் இந்த திட்டத்திற்கான கொள்கை ஒப்புதலை அளித்துள்ளனர். இந்த  சிலை பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டதில் இருந்து இதுவரை 19 லட்சம் பேர் பார்வையிட்டு உள்ளனர்,” என்றார்.

மூலக்கதை