ஹாங்காங் நகரில்பிரமாண்ட பேரணி

தினமலர்  தினமலர்
ஹாங்காங் நகரில்பிரமாண்ட பேரணி

ஹாங்காங்:சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்து, ஹாங்காங் நகர இளைஞர்கள், பத்து வாரங்களுக்கும் மேலாக, பல விதமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஞாயிறுக்கிழமையான நேற்று, விடுமுறையானதால், அந்நகர வீதிகளில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று, பேரணியாக சென்று, போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தினர். கறுப்பு உடை அணிந்த போராட்டக்காரர்களுடன், அந்த நகர மக்களும் கலந்து கொண்டனர். இதனால், அந்த நகரமே முடங்கியது.கடந்த வாரம், விமான நிலையத்திற்குள் புகுந்து, போராட்டக்காரர்கள் நடத்திய வன்முறையில், போலீசார் பலர் படுகாயமடைந்தனர்; விமான நிலையம் சில நாட்கள் மூடப்பட்டது.
ஆப்கனில் இன்று100 வதுசுதந்திர தினம்
காபூல்:ஆப்கன் நாடு, இன்று, 100 வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. ஆங்கிலேயர்கள் பிடியில் இருந்த அந்த நாடு, சுதந்திரம் அடைந்து, இன்றுடன், 100 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு, நாடு முழுவதும் கொண்டாட்டங்களுக்கு, அதிபர், அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார். அந்நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த போது, மன்னராக இருந்த, அமனுல்லா கான், அவர் மனைவி, ராணி சோரயா படங்கள், பல நகரங்களில், வண்ண விளக்குகளால் நேற்றே அலங்கரிக்கப்பட்டிருந்தன.சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய பிரதமர், மோடி, ஆப்கன் அதிபருக்கு, வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மனநோயாளிவன்முறை:4 பேர் பலி
புகாரெஸ்ட்:ஐரோப்பிய நாடான ருமேனியாவின், சபோகா நகரில் உள்ள, மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, 38 வயது நபர், நேற்று, திடீரென வன்முறையில் இறங்கி, நான்கு பேரை கொன்று குவித்தார். குளுக்கோஸ் பாட்டில்களை தொங்க விடும் இரும்பு கம்பியால், கண்மூடித்தனமாக அந்த நபர் நடத்திய தாக்குதலில், ஒன்பது பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில், இருவர், 'கோமா' எனப்படும் நிரந்தர மயக்க நிலைக்கு ஆளாகியுள்ளனர்.படுகொலைகளை புரிந்த நோயாளி, போலீசாரால் பிடிக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
விமானம் விழுந்துவீட்டிலிருந்தஇருவர் பலி
யூனியன் வாலே:அமெரிக்காவின் நியூயார்க் புறநகர் பகுதியான, யூனியன் வாலே என்ற இடத்தில், சிறிய ரக, 'செஸ்னா' விமானம், இரண்டு மாடி வீடு ஒன்றில் விழுந்து நொறுங்கியதில், அந்த வீட்டிலிருந்த, இருவர் இறந்தனர். விபத்தால் அந்த வீடு தீப்பற்றி எரிந்தது. இதில் இருந்த ஒருவரை காணவில்லை. எனினும், இரண்டு வளர்ப்பு நாய்கள், தீயில் இருந்து உயிர் தப்பியுள்ளன. விமானத்தில் ஏற்பட்ட கோளாறு தான், விபத்திற்கு காரணம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவில் சிக்கி7 பேர் பலி
முசாபராபாத்:இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான, எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில், ஏழு பேர் இறந்தனர். அவர்கள் அனைவரும், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்களில், ஐந்து பேர் குழந்தைகள். அப்பகுதி மக்களே மீட்பு பணியில் ஈடுபட்டு, உடல்களை மீட்டனர்.
இஸ்ரேல் தாக்குதலில் 3 பேர் பலி
காசா:இஸ்ரேல் - பாலஸ்தீன நாடுகளுக்கு இடையேயான எல்லைச் சுவரை தாண்டி, பாலஸ்தீனத்திலிருந்து இஸ்ரேல் மீது ராக்கெட் குண்டுகள் நேற்று வீசப்பட்டன. அதில், இஸ்ரேல் தரப்பில் யாருக்கும் பாதிப்பில்லை. அதே நேரம், இஸ்ரேல் நடத்திய பதிலடி, ஹெலிகாப்டர் தாக்குதலில், மூன்று பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
பாக்., வர்த்தகர்கள்கோரிக்கை
இஸ்லாமாபாத்:காஷ்மீர் விவகாரத்தை அடுத்து, இந்தியாவுடனான வர்த்தக உறவை பாகிஸ்தான் துண்டித்துள்ளது. இதனால், பாகிஸ்தானின் சந்தைகளிலும், துறைமுகங்களிலும் குவிந்துள்ள பொருட்கள் முடக்கப்பட்டுள்ளன. அவற்றை விடுவித்து, விற்பனைக்கு அனுப்ப வேண்டும் என, பாகிஸ்தான் தொழிலதிபர்கள், அந்நாட்டு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்திய பொருட்கள் முடக்கத்தால், தங்களின் பணப்புழக்கம் பாதிப்படைந்துள்ளதாக, கடிதத்தில் தொழிலதிபர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
'ரிமோட்' குண்டுஇயக்கி பாக்.,கில்ஐந்து பேர் கொலை
பெஷாவர்:பாகிஸ்தானின், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில், உள்ளூர் அமைதிக்குழுவினர் தங்கியிருந்த கட்டடத்தை, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், 'ரிமோட்' வெடிகுண்டு மூலம் வெடிக்கச் செய்தனர். இதில், ஐந்து பேர் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில், அமைதிக்குழுவினர் உள்ளனரா என்பது குறித்து தகவல் இல்லை.

மூலக்கதை