3 மாநில சட்டசபை தேர்தல் முதல்வர்கள் தலைமையில் சந்திக்கிறது பா.ஜ.,

தினமலர்  தினமலர்
3 மாநில சட்டசபை தேர்தல் முதல்வர்கள் தலைமையில் சந்திக்கிறது பா.ஜ.,

புதுடில்லி:மஹாராஷ்டிரா, ஹரியானா மற்றும் ஜார்க்கண்டில், இந்தாண்டு இறுதியில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலை, மாநில முதல்வர்கள் தலைமையில் சந்திக்க, பா.ஜ., திட்டமிட்டுள்ளது.

மஹாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு, இந்தாண்டு இறுதியில் சட்ட சபை தேர்தல் நடக்க உள்ளது.கடந்த, 2014ல் இந்த மாநிலங்களுக்கு நடந்த தேர்தலின்போது, முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்காமல், பா.ஜ., போட்டியிட்டது.தற்போது நடக்க உள்ள தேர்தலில், மாநில முதல்வர்கள் தலைமையில் சந்திக்க, பா.ஜ., திட்டமிட்டு உள்ளது.

இது குறித்து, பா.ஜ., மூத்த தலைவர்கள் கூறியதாவது:கடந்த, 2014ல் தேர்தல் வெற்றிக்குப் பிறகே, இந்த மூன்று மாநிலங்களுக்கும் முதல்வரை தேர்வுசெய்தோம்.மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், ஹரியானா முதல்வர், மனோகர் லால் கட்டார், ஜார்க்கண்ட் முதல்வர், ரகுபர் தாஸ் ஆகியோரின், இந்த ஐந்து ஆண்டு கால சிறப்பான ஆட்சியை முன்வைத்தே, இந்தத் தேர்தலை சந்திக்க உள்ளோம்.

இந்த முதல்வர்கள் தலைமையில், தேர்தலை சந்திப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. ஹரியானாவில், சமீபத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய, கட்சித் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான, அமித் ஷா, 'மீண்டும் ஆட்சி அமைந்தால், மனோகர் லால் கட்டார் தான் முதல்வராக இருப்பார்' என்று அறிவித்தார்.

மற்ற இரு மாநிலங்களிலும், இதே நிலை தான் இருக்கும்.இந்த மாநிலங்களில் முந்தைய ஆட்சிகளின்போது, ஊழல் புகார்கள் கூறப்பட்ட நிலையில், இந்த மூவரும், எந்த ஊழல் புகாரும் இல்லாமல், சிறப்பாக நிர்வாகம் செய்துள்ளனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மூலக்கதை