பிரதமர் மோடியின் பூடான் பயணம் நிறைவு

தினமலர்  தினமலர்
பிரதமர் மோடியின் பூடான் பயணம் நிறைவு

திம்பு:அண்டை நாடான பூடானுக்கு, இரண்டு நாள் பயணமாக சென்றிருந்த பிரதமர் மோடி, நேற்று நாடு திரும்பினார்.

முன்னதாக, அந்நாட்டின் பிரதமர் மற்றும் மன்னரை சந்தித்து, இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.கடந்த சனிக்கிழமை, பிரதமர் மோடி, பூடான் சென்றார். அவர் பூடான் செல்வது, இது இரண்டாவது முறை. மீண்டும் பிரதமரான பிறகு, மேற்கொள்ளும் முதல் சுற்றுப்பயணம் இது.

அந்நாட்டின் தலைநகர், திம்புவில் தங்கியிருந்த மோடி, பூடான் பிரதமர், லோடே ஷெரிங்கை சந்தித்து, பல துறைகளில், இரு நாடுகளின் உறவு குறித்து பேச்சு நடத்தினார்.குறிப்பாக, விண்வெளி ஆராய்ச்சி, விமான போக்குவரத்து துறை, தகவல் தொழில்நுட்பம், மின்சாரம் மற்றும் கல்வி தொடர்பாக, இரு நாடுகளுக்கும் இடையே, 10 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப் பட்டன. பூடான் தற்போதைய மன்னர், ஜிக்மே கேசர் நாம்கியெல் வாங்சுக்கை சந்தித்து, இரு நாடுகளின் ஒற்றுமையை, மேலும் முன்னெடுத்துச் செல்வது குறித்து விவாதித்தார்.

அந்நாட்டின், நான்காவது மன்னர், ஜிக்மே சிங்யே வாங்சுக்கையும் சந்தித்து, இருதரப்பு உறவை பலப்படுத்தும் அம்சங்கள் குறித்து பேசினார்.நேற்று அவர், பூடான் ராயல் பல்கலைக் கழகம் சென்று, மாணவர்கள் மத்தியில், உற்சாகமாக உரையாற்றினார்.அப்போது அவர், ''இந்தியாவும், பூடானும், இயற்கையிலேயே ஒரே குடும்ப உறவு கொண்ட பங்காளி நாடுகள். இரு நாடுகளும் பரஸ்பரம், புரிந்து கொண்ட நாடுகள். மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்; நாட்டை முன்னேற்ற வேண்டும்,'' என்றார்.

அதன் பின், அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர், பெமா கியாம்ட்ஷோவை சந்தித்தார். மூன்றாம் மன்னர் நினைவாக கட்டப்பட்டுள்ள, சோர்டென் தேசிய நினைவிடம் சென்று, மறைந்த மன்னருக்கு அஞ்சலி செலுத்தினார். இந்த மன்னர் தான், பூடான் நாட்டை, உலகம் தெரிந்து கொள்ளச் செய்தார். அதற்கு முன் வரை, வெளிநாட்டினர் பயணிக்காத நாடாக, வெளி உலகத்தினர் புரிந்து கொள்ளாத நாடாக அது விளங்கியது.பிரதமர் மோடிக்கு, பூடான் மன்னர், நேற்று மதிய விருந்தளித்தார். அதையடுத்து, இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து, பிரதமர் மோடி, நாடு திரும்பினார்.

மூலக்கதை