கரைபுரளட்டும்! உயிர் பெறுகிறது அணைப்பாளையம் தடுப்பணை

தினமலர்  தினமலர்
கரைபுரளட்டும்! உயிர் பெறுகிறது அணைப்பாளையம் தடுப்பணை

திருப்பூர்:நொய்யல் ஆற்றின் குறுக்கே, உடைந்த, அணைப்பாளையம் தடுப்பணைக்கு உயிரூட்டும் முயற்சிகள் துவங்கியிருக் கின்றன.காவிரி நதியின் துணை ஆறான நொய்யல், பல்வேறு தடுப்பணைகள், குளங்களை உள்ளடக்கிய நீர் பாசன அமைப்பாகவும், ஒரு காலத்தில், இருந்தது.
அப்போது, இதன் நீர் தெளிவாகவும், சுவையாகவும் இருந்தது. மாசுபாடின்றி காணப்பட்ட நொய்யல் ஆறு, கடந்த, 30 ஆண்டுகளில், மாசடைந்ததாக மாறிவிட்டது. நீரை குடிப்பதற்கும் விவசாயத்துக்கும் பயன்படுத்த முடிவதில்லை.அதேசமயம், நொய்யல் ஆறு, பெருமழைக்காலங்களிலாவது உயி ரோட்டத்துடன் இருப்பதற்கு, தன்னார்வ அமைப்புகளின் சமீப கால முயற்சிகளே காரணமாக அமைந்துள்ளன. தற்போது, திருப்பூர் அணைப்பாளையத்தில் உடைந்த நொய்யல் தடுப்பணையை சீரமைக்க, 'திருப்பூர் மக்கள் நல அறக்கட்டளை' முன்வந்துள்ளது.
அதன் தலைவர் கந்தசாமி கூறியதாவது:நொய்யல் ஆற்றின் குறுக்கே, அணைப்பாளையத்தில், பெரிய தடுப்பணை இருந்தது. இது, 300 மீட்டர் அகலத்தில், பல ஆண்டுகளுக்கு முன், கற்களை அடுக்கி கட்டப்பட்டது. மழைக்காலங்களில் நீர் வரும்போது, இந்த தடுப்பணையில், மூன்று கி.மீ., துாரம் தண்ணீர் தேங்கி நிற்கும்.
சுற்றுப்பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களின் நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாகவும், பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாகவும், இத்தடுப்பணை இருந்தது.நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணைகள் அனைத்தும், குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையிலேயே உள்ளன. ஆனால், ஆற்றையே குளமாக மாற்றும் வகையில், இந்த அணை கட்டப்பட்டிருந்தது.
சில ஆண்டுகளுக்கு முன், தடுப்பணை முற்றிலும் சேதமடைந்தது.ஆனால், அதனை சரி செய்யாமல் அப்படியே விட்டு விட்டனர். இதனால், தற்போதைய மழைக்கு நொய்யல் ஆற்றில் வரும் நீர் முழுவதும் அணையில் தேங்காமல், தண்ணீர் வீணாகிறது. எனவே, அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன், மீண்டும் அதே பகுதியில் அணைக்கட்டு அமைக்க தயாராக உள்ளோம்.இவ்வாறு, கந்தசாமி தெரிவித்துள்ளார்.

மூலக்கதை