திருப்திப்படுத்தும் அரசியல்தான் முத்தலாக் நீடித்ததற்கு காரணம்: உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

தினகரன்  தினகரன்
திருப்திப்படுத்தும் அரசியல்தான் முத்தலாக் நீடித்ததற்கு காரணம்: உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

புதுடெல்லி: ‘‘இவ்வளவு காலம் முத்தலாக் நடைமுறை ஒழிக்கப்படாமல் இருந்ததற்கு, திருப்திபடுத்தும் அரசியலே காரணம்’’ என காங்கிரஸ் மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டினார்.  முஸ்லிம் பெண்களை மூன்று முறை தலாக் கூறி உடனடியாக விவாகரத்து செய்வது குற்றமாக அறிவித்து, நாடாளுமன்றத்தில் சமீபத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற `வரலாற்று தவறை திருத்தும் முத்தலாக் ஒழிப்பு’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். அதில் அவர் பேசியதாவது: முத்தலாக் ஒழிப்பு சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது என மக்களிடம் தவறான தகவல் பரப்பப்படுகிறது. ஆனால், உண்மையில் இது முஸ்லிம்கள் பயன்அடையும் சட்டம். உரிமைகள் மறுக்கப்பட்ட கோடிக்கணக்கான முஸ்லிம் பெண்களின் கனவை நனவாக்கவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ் முத்தலாக்கை தொடர்ந்து எதிர்த்து வருவதாக வெட்கமே இல்லாமல் கூறி வருகிறது. தாங்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காகவே வாக்கு வங்கிகளை காத்துக் கொள்ள, திருப்திபடுத்தும் அரசியலை அவர்கள் நடத்தி வருகின்றனர். இத்தனைக் காலம் முத்தலாக் நடைமுறை நீடித்ததற்கு இந்த மனப்பான்மையே காரணம். மரபுவழி முஸ்லிம்கள் வாக்கு வங்கியின் காரணமாகவே ஷாபானோ வழக்கில் ராஜிவ் காந்தி உச்ச நீதிமன்ற முடிவை ரத்து செய்து சட்டம் கொண்டு வந்தார். பொதுவாக, தவறான நடைமுறைகள் ஒழிக்கப்படுவதை மக்கள் வரவேற்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை